பேட்டரி பைக் தயாரிப்பு ஆலை நிறுவுகிறது ஆஸி., நிறுவனம்

‘தமிழகத்தில் உயர்கல்வி, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் முதலீடு செய்ய, ஆஸ்திரேலியா விரும்புகிறது,” என, தென் மாநிலங்களுக்கான, ஆஸ்திரேலிய துணை துாதர் சாரா கிரிலேவ் தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து, 80க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆஸ்திரேலியா சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில், தொழில் வர்த்தக வாய்ப்புகள் குறித்து, அந்நாட்டின் துாதரக அதிகாரிகள், முதலீட்டாளர்களிடம் எடுத்துரைத்தனர்.

இதுகுறித்து, தென்மாநிலங்களுக்கான, ஆஸ்திரேலிய துணை துாதர் சாரா கிரிலேவ் கூறியதாவது: முதலீட்டாளர்கள் மாநாடு, இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளின் தொழில் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த உதவும்.

கடந்த ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தால், பல்வேறு வரி சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன. இதனால், இருநாட்டின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் சுகாதாரம் ஆகிய துறைகளில், தமிழக அரசுடன், ஆஸ்திரேலியா இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்ய உள்ளோம். பேட்டரி பைக் தயாரிப்பு ஆலையை தமிழகத்தில் நிறுவ உள்ளோம். சுகாதாரம், ஆராய்ச்சி துறைகளிலும் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.