இறங்கி வந்தது மாலத்தீவு அரசு இந்திய துாதரிடம் நீண்ட விளக்கம்

‘பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடைய சொந்த கருத்துக்கள், அரசின் நிலைப்பாடு அல்ல’ என, நம் துாதரிடம், மாலத்தீவுகள் அரசு விளக்கம் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள சுற்றுலா வசதிகள் குறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் புதிய அரசு, சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதையடுத்து, மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு பதிலாக, நம் நாட்டின் லட்சத்தீவுக்கு செல்லலாம் என, சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், லட்சத்தீவின் சுற்றுலா வசதிகள் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்து, மாலத்தீவுகளின் அமைச்சர்கள் சிலர் பதிவிட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டதுடன், மூன்று அமைச்சர்களை நீக்கி, மாலத்தீவுகள் அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், இந்தியாவுக்கான மாலத்தீவுகள் துாதர் இப்ராஹிம் ஷாகீப்பை நேரில் வரவழைத்து, நம் வெளியுறவுத் துறை நேற்று கண்டனம் தெரிவித்தது. அப்போது, மாலத்தீவுகள் அரசின் நிலைப்பாடு குறித்து அவர் நீண்ட விளக்கம் அளித்தார்.

இதே நேரத்தில், மாலத்தீவுகளுக்கான இந்தியத் துாதர் முனு முஹாவிர், மாலேயில் உள்ள மாலத்தீவுகள் வெளியுறவுத் துறைக்கு நேற்று நேரில் சென்றார். அப்போது, மாலத்தீவுகள் வெளியுறவுத் துறை உயர் அதிகாரி அலி நசீர் முகமது, அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்தார்.

‘அமைச்சர்கள் சிலரின் கருத்துக்கள், அரசின் கருத்து அல்ல. அரசின் நிலைப்பாடும் அதுவல்ல. இந்தியா போன்ற அண்டை நாடுகளுடன் நட்புடன் இருக்க விரும்புகிறோம்’ என, அவர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், மாலத்தீவுகள் வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர், சமூக வலைதளப் பதிவில், ‘வெளிநாட்டுத் தலைவர்கள் குறித்த மோசமான கருத்துக்களை ஏற்க முடியாது. அவர்களுடைய தனிப்பட்ட கருத்து, அரசின் நிலைப்பாடு அல்ல.

‘நம் அண்டை நாடுகளுடன் நட்புடன் இருப்பதையே மாலத்தீவுகள் விரும்புகிறது. இந்த பிரச்னைக்கு பேச்சு நடத்தி தீர்வு காணப்படும்’ என, குறிப்பிட்டார்.