கரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களை இந்திய கொண்டு வர ஏற்பாடு

கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனாவின் வூஹான் நகரிலிருந்து 400 இந்தியர்களை தனி விமானத்தில் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இந்தியா வந்ததும் டெல்லிக்கு அருகே புதிதாக அமைக்கப்பட்ட 2 சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம், வூஹான் நகரில் கரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவானது. இந்த வைரஸ், ஐரோப்பா,வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் வூஹான் நகரம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் சீனாவுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவியாக அளிக்கவேண்டிய சிகிச்சைகள் பற்றியும் உலக சுகாதார அமைப்பு இரு வாரங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது.

சுகாதார அவசர நிலை

இதற்கிடையே, கரோனா வைரஸ் குறித்து விவாதிக்க சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் அவசர குழு கூட்டம் உலகசுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ)சார்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்களுடன் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. கரோனா வைரஸ் தாக்குதலினால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு நேற்றுபிரகடனப்படுத்தியுள்ளது. இதன்மூலம் உலகின் அனைத்து நாடுகளும் இந்த வைரஸ் நோய்க்கான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா வேண்டுகோள்

உலக சுகாதார அவசர நிலையை, உலக சுகாதார அமைப்புவிடுத்திருக்கும் நிலையில் அனைத்து நாடுகளும் இந்த விவகாரத்தில் பொறுப்பான முறையில் செயல்படவேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ.நா. சபைக்கான சீன தூதர் ஜாங்ஜுன் கூறும்போது, “கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இன்னும் நெருக்கடியான நிலையில் நாங்கள் இருக்கிறோம். இந்த விஷயத்திலிருந்து நாங்கள் மீண்டு வர சர்வதேச நாடுகளிடையே ஒற்றுமை தேவை. வீணான தகவல்களை பரப்பவேண்டாம்” என்றார்.

உயிரிழந்தோர் அதிகரிப்பு

இதனிடையே, சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 43 பேர் இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிப்புஅடைந்துள்ளனர் என சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் புறப்பாடு

இந்நிலையில், வூஹானிலுள்ள இந்தியர்களை அழைத்து வர இந்தியாவிலிருந்து தனி விமானம் நேற்று புறப்பட்டது. கல்வி மற்றும்வேலை நிமித்தமாக சுமார் 600 இந்தியர்கள் வூஹான் நகரில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்ததும் இவர்கள் தங்களது விடுதிகள் மற்றும் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்தமாணவர்கள் தங்களை மீட்க வேண்டும் என்று சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்தனர். அவர்களது பெற்றோரும் மத்திய அரசை அணுகினர். இதையடுத்து சீன அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

முக கவசம், உணவு உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு உருவாகி இருப்பதால் இந்தியர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்களை கேட்டுக் கொண்டனர். இதையடுத்துசீன அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அவர்களை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கி உள்ளது. இந்தியர்களை மீட்க ஏற்கெனவே போயிங் 747 ரக விமானத்தைமத்திய அரசு தயாராக நிறுத்தி இருந்தது.

அந்த தனி விமானம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில்இருந்து நேற்று புறப்பட்டது. வூஹான் நகரில் இருந்து முதல்கட்டமாக 400 இந்தியர்களை வெளியேற்ற சீனாவில் உள்ள இந்திய தூதர் ஏற்பாடு செய்துள்ளார். அந்த400 பேரையும் இந்த தனி விமானத்தில் அழைத்துவர உள்ளனர். அவர்களுக்கு விமானத்தில் ஏறும் முன்பு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.

விமானத்தில் 5 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட மருத்துவக் குழுவும் செல்கிறது. அவர்களும் வூஹானில் இருந்து திரும்பும் இந்தியர்களை தீவிரமாக கண்காணிப்பார்கள். இந்த தனி விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவருபவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர். அவர்கள் அனைவரும் டெல்லி மனேசர் பகுதியில் உள்ளசிறப்பு மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

இதேபோல், தெற்கு டெல்லிபகுதியில் 600 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை துணை ராணுவப் படையானஇந்தோ திபெத் எல்லையோர போலீஸார் (ஐடிபிபி) உருவாக்கியுள்னர். சீனாவிலிருந்து தனி விமானத்தில் வரும் இந்தியாவைச் சேர்ந்தவர்களை இந்த 2 சிறப்பு மருத்துவமனைகளிலும் வைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாணவி

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மாணவி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள சிறப்பு வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.