கனடா அமைச்சரான தமிழ் பெண்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்தும் இடம்பெற்றுள்ளார்.

கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை (நவம்பர் 20) அன்று, தன்னுடைய அமைச்சரவை உறுப்பினர்களை அறிவித்தார். 37 பேர் கொண்ட அமைச்சரவையில், நவ்தீப் சிங் பெய்ன்ஸ், ஹர்ஜித் சிங் சஜ்ஜன், பார்தீஷ் சாகர், அனிதா ஆனந்த் ஆகியோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆவர்.

இதில், நவதீப் சிங் பெய்ன்ஸ்-க்கு அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சஜ்ஜன்-க்கு தேசிய பாதுகாப்பு அமைச்சகம், அனிதா ஆனந்த்-க்கு பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சகம், சாகர் பன்முகத்தன்மை மற்றும் இளைஞர்களின் அமைச்சரானார்.

டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியாக பணிபுரிந்த இவர், நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் நகரில் பிறந்தவர். எனினும், தமிழ்நாட்டின் வேலூரை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த்தின் தந்தை ஒரு மருத்துவர் ஆவார். அவரது பெயர் சுந்தரம் விவேகானந்தன்.

கனடிய இந்து நாகரிக அருங்காட்சியகத்தின் முந்தைய தலைவராக பணியாற்றிய அனிதா, கனடாவில் பத்திரங்கள் சட்டத்தை நவீனமயமாக்குவதற்கான பணிக்குழு, தீவிரவாதிகளால் குண்டுவெடிப்பில் ஏர் இந்தியா விமானம் 182 தொடர்பான விசாரணை ஆணையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்துள்ளார்.