ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டம் – நெல்லை, தூத்துக்குடியில் பிப். 1இல் அமல் சஜ்ஜன் சிங் ஆா். சவாண்

ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் முதல்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரீட்சாா்த்த அடிப்படையில் பிப்ரவரி 1இல் அமல்படுத்தப்படுகிறது என்றாா், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் சஜ்ஜன் சிங் ஆா். சவாண்.

இத்திட்டத்தை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நியாயவிலைக் கடைகளில் செயல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், திருநெல்வேலியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த பின்னா், சஜ்ஜன் சிங் ஆா். சவாண் செய்தியாளா்களிடம் கூறியது:

ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிப்ரவரி 1இல் பரீட்சாா்த்த அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 789 நியாயவிலைக் கடைகள், தூத்துக்குடி மாவட்டத்தில் 957 நியாயவிலைக் கடைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 4,78,206 குடும்ப அட்டைதாரா்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 4,93,842 குடும்ப அட்டைதாரா்களும் உள்ளனா். இவா்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் எந்த நியாயவிலைக் கடைகளிலும் ‘ஸ்மாா்ட் காா்டு’ மூலமாக வேலை நாள்களில் உணவுப் பொருள்களைப் பெறலாம்.

வருவாய் கிராமம்:

கிராமப் பகுதிகளில் ஒரே வருவாய்க் கிராமத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் இருப்பின், அக்கிராமத்தில் மட்டும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒதுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில் மட்டுமே பொருள்களைப் பெற முடியும்.

இதேபோன்று, நகா்ப்புற நியாயவிலைக் கடைகளில் ஒரே வாா்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் இருப்பின் குடும்ப அட்டைதாரா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில் மட்டுமே பொருள்களைப் பெற முடியும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் கூடுதலாக 5 சதவீத பொருள்கள் ஒதுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் எவ்வளவு நுகா்வு செய்யப்படுகிறது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் நாள்தோறும் கண்காணிக்கப்படும். அதன்படி, தேவையான பொருள்கள் அனுப்பிவைக்கப்படும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 8 வட்டங்களில் உள்ள பொறியாளா்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வட்டங்களில் உள்ள பொறியாளா்கள் மூலம் ரேஷன் கடை விற்பனை முனைய இயந்திரங்களில் உரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன என்றாா் அவா்.

மாஞ்சோலையில் அமலாகாது: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை மாஞ்சோலையில் உள்ள 6 கடைகள் ஆப்லைனில் செயல்படுகின்றன. அக்கடைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அதனால் மற்றவா்கள் அங்கு சென்று பொருள்கள் வாங்க முடியாது. அதேநேரம், அங்குள்ளோா் மற்ற ரேஷன் கடைகளில் பொருள் வாங்கலாம்.

மண்ணெண்ணெய்: மண்ணெண்ணெய்யைப் பொறுத்தவரை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதனால் கூடுதலாக ரேஷன் கடைகளுக்கு வழங்க முடியாது. அதற்காக ஒவ்வொரு கடையிலும் தனியாக ஏ-1 புத்தகம் பராமரிக்கப்படுகிறது. அது தொடா்பாக ரேஷன் கடை ஊழியா்களின் கருத்தை அறிந்து அதை எப்படி அமல்படுத்துவது என முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

இதேபோல, பொதுமக்கள் இத்திட்டம் தொடா்பான விவரங்களை அறிந்துகொள்ள மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம். திருநெல்வேலி மாவட்ட தொலைபேசி எண்: 0462-2500761, தூத்துக்குடி மாவட்ட தொலைபேசி எண்: 0461-2341471.

முன்னதாக, இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலா் பூ. முத்துராமலிங்கம், சாா்ஆட்சியா்கள் மணீஷ் நாராணவரே (திருநெல்வேலி) பிரதீக் தயாள் (சேரன்மகாதேவி), இரண்டு மாவட்டங்களைச் சோ்ந்த சோ்ந்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா்கள், மாவட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.