எஸ்.ஐ., வில்சன் கொலையில் கைதான பயங்கரவாதிகள் மீது ‘உபா’ சட்டம் பாய்ந்தது

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வில்சன் எஸ்.ஐ.,யை சுட்டு கொன்ற பயங்கரவாதிகள் மீது ‘உபா’ சட்டம் பாய்ந்தது. ஜன., 20-ல் அவர்கள் குளித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும்போது போலீஸ் காவல் அனுமதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.களியக்காவிளை சோதனை சாவடியில் ஜன., 8 இரவு பணியில் இருந்த வில்சனை இருவர் சுட்டுக்கொன்றனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல்சமீம், தவுபிக் என்று தெரியவந்தது. அவர்களின் வீடுகளில் ஏற்கெனவே என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்ததால் அவர்கள் பயங்கரவாதிகள் என்பது உறுதியானது.கர்நாடகா மாநிலம் உடுப்பியில் அப்துல்சமீம், தவுபிக் கைது செய்யப்பட்டனர். ஜன.,16- அதிகாலை களியக்காவிளை கொண்டு வந்தனர். அங்கு 2 மணி நேரம் விசாரணை நடந்தது. பின்னர் தக்கலை போலீஸ் ஸ்டேஷக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு 13 மணி நேரம் விசாரணை நடந்தது. இரவு 9:30 மணிக்கு குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லை சிறையில் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டனர்.விசாரணையில் பல தகவல்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

சென்னை அம்பத்துாரில் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் சமீமுக்கும், டில்லியில் அண்மையில் கைதான பயங்கரவாதிகள் காஜா மொய்தீன், அப்துல் சமது, சையது அலி நவாஸுக்கும் தொடர்பு இருந்துள்ளது. அவர்களைத் தேடி வந்த நிலையில்தான் வில்சனை அப்துல்சலீம் சுட்டுக் கொன்றார். அடுத்த நாள் டில்லியில் மூவரும் கைது செய்யப்பட்டனர். வில்சன் கொலை வழக்கில் மேலும் 15 பேருக்கு தொடர்பு உள்ளது.டில்லி, பெங்களூருவில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வில்சனை கொலை செய்துள்ளனர். குடியரசு தினத்தில் தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த ஐந்து பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. அப்துல்சமீம், தவுபிகிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாதத்துக்கு உதவியவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இருவர் மீதும் ‘உபா’ சட்டம் பாய்ந்ததாக எஸ்.பி., ஸ்ரீநாத் நேற்று அறிவித்தார்.ஜன., 20-ல் அப்துல்சமீம், தவுபிக் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் போது, 15 நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. போலீஸ் காவலில் எடுக்கும் போது டில்லியில் இருந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணைக்கு வர உள்ளனர். வில்சன் கொலைக்கு பின் அலைபேசியில் பேசினால் தெரிந்து விடும் என்பதற்காக இணைதளம் ஒன்றை உருவாக்கி அதில்பயங்கரவாதிகளுடன் பேசியுள்ளனர்.

‘உபா’ ‘அன்லாபில் ஆக்டிவிட் டிஸ்பிரிவென்சன் ஆக்ட்’ என்பது சுருக்கமாக ‘உபா’ என்று அழைக்கப்படுகிறது. 1967-ல் இருந்து இந்த சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களை 30 நாட்கள் வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கலாம். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் 180 நாட்கள் சிறையில் அடைத்து வைக்கலாம். சிறப்பு கோர்ட்டில் மட்டுமே விசாரணை நடைபெறும். விசாரணையின் போது பொது மக்கள், செய்தியாளர்களுக்கு அனுமதி கிடையாது. இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் பல கால கட்டங்களில் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, பயங்கரவாத அமைப்பில் உள்ளவர்கள் மட்டுமின்றி பயங்கரவாதத்தில் ஈடுபடும் தனிநபர்கள் மீதும் இந்த சட்டத்தை பயன்படுத்தலாம் என்று திருத்தம் செய்யப்பட்டது.