என்பிஆர் திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. இது தொடர்பாக புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் உத்தரவிட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 144 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக இருப்பதால் குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்ய வேண்டும் என்றும் அதைஅமல்படுத்த உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்டது. இதுபோல, தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்) புதுப்பிக்கும் பணிக்கும் தடைவிதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த 22-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் என்பிஆர் திட்டத்துக்கும் இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்தமனுக்களை 5 நீதிபதிகள் அடங்கியஅரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த மனுக்கள் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், சிஏஏ மற்றும் என்பிஆர்-க்கு எதிராக மேலும் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், என்பிஆர் திட்டத்துக்கு திரட்டப்படும் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே அவற்றை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தனர்.

இந்த மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன. அப்போது, என்பிஆர் திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக ஏற்கெனவே தாக்கல்செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் சேர்த்து இந்த மனுக்களும் விசாரிக்கப்படும் என தெரிவித்தனர். இதுகுறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.