எதை விதைக்கிறீர்கள்

ஒரு சிறுவனுக்கு ‘தப்பு பண்ணா சாமி கண்ணை குத்திடும்’ என சொல்லி கொடுக்கப்படுகிறது. அது உண்மையா பொய்யா, கண்டுபிடிக்க ஆர்வம் அவனுக்கு. ஒருமுறை அவன் நண்பனின் பேனாவை திருடுகிறான்.

அவன் கண்ணை சாமி குத்துகிறதா என பார்க்கிறான், குத்தவில்லை. வீட்டில் கேட்கிறான். ‘அப்புறமா குத்திடும்’ என்கின்றனர். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. நம்பிக்கை போகிறது.

இவனும் பேனா திருடுகிறான். எச்சரித்த நண்பர்களுக்கு, ‘அதெல்லாம் சும்மாடா, உனக்கு வேணும்னா நீயும் எடுத்துக்கோ’ என்கிறான். திருட்டு பரவுகிறது, இது எதிர்மறை சிந்தனை !

அதே சிறுவனிடம் ‘நல்லது பண்ணா நல்லது நடக்கும்’ என்று நேர்மறையாக சொல்லி இருந்தால்? அவன் பள்ளிக்கு போகிறான். சாலையின் நடுவே ஒரு கல். அதை எடுத்து ஓரமாய் போடுகிறான். பரிட்சை பேப்பரில் வழக்கத்தை விட சில மார்க் அதிகமாக கிடைக்கிறது. எப்படி என வியந்த நண்பனிடம், காலையில் ஒரு நல்லது பண்ணிணேன். அதனால கிடைச்சிருக்கும் என்கிறான்.  நண்பனும் நம்புகிறான்.

நண்பன், சாலை ஓரத்தில் ஒரு நாய்க்குட்டிக்கு பிஸ்கட்டை போடுகிறான். அடுத்த நாள் எதேச்சையாக ஒரு ரூபாய் கிடைக்கிறது. பிஸ்கட் போட்டதால் தான் ஒரு ரூபாய் கிடைத்தது என்று நம்புவதோடு அதை நண்பர்களுக்கு சொல்ல அனைவரும் முயற்சிக்கின்றனர். நல்லது வளர்கிறது.

இது நேர்மறை சிந்தனை. நல்லா படிக்கலன்னா கஷ்டப்படுவே என்று சொல்லாதீர்கள். நல்லா படிச்சா சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்லுங்கள். நாம் அதிகமான எதிர்மறை சிந்தனைகளை தான் பிள்ளைகளிடம் வளக்கிறோம். இனி திருத்திக் கொள்வோம். நேர்மறை சிந்தனைகளை விதைப்போம் ! ! !