‘எங்களுடைய உள்நாட்டு பிரச்னையில் ஐரோப்பிய யூனியன் தலையிடக்கூடாது’ என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, ஐரோப்பிய யூனியன் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

‘எங்களுடைய உள்நாட்டு பிரச்னையில், மற்றவர்கள் தலையிட வேண்டாம்’ என, கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.விவாதம்இந்த நிலையில், 28 ஐரோப்பிய நாடுகள் அடங்கிய, ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆறு குழுக்கள், ஆறு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள், பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரசல்ஸில் உள்ள ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில், நாளை விவாதிக்கப்பட உள்ளன. அதற்கடுத்த நாள், இந்த ஆறு தீர்மானங்கள் மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்த சட்டமானது, முழுக்க முழுக்க எங்களுடைய உள்நாட்டு பிரச்னை. பார்லி.,யின் இரு சபைகளிலும், பல்வேறு கட்சி எம்.பி.,க்களால் விவாதிக்கப்பட்டு, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.பாரபட்சம் இல்லைஎந்த அடிப்படையில் குடியுரிமை அளிக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்கு, நாடுகளுக்கு உரிமை உள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளும் இதை பின்பற்றியுள்ளன. இந்த சட்டத்தில், எந்தப் பாகுபாடோ, பாரபட்சமோ இல்லை.ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களின் உரிமை மற்றும் அதிகாரம் குறித்து, கேள்வி எழுப்பக் கூடாது. இந்த சட்டம் தொடர்பாக, ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில் எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. இந்த சட்டம் குறித்து எந்த சந்தேகம் இருந்தாலும், அதற்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

‘தலையீடு கூடாது’

டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஐரோப்பிய யூனியனின் பெயரைக் குறிப்பிடாமல், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: நம் நாட்டின் பார்லி மென்ட் மற்றும் அரசின் நடவடிக்கைகளில், மற்ற நாடுகள் தலையிடும் போக்கு அதிகரித்துள்ளது. இது தேவையில்லாத ஒன்று. இனி இது போன்று, நம் உள்நாட்டு விவகாரங்களில், மற்ற நாடுகள் தலையிடாமல் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு, அவர் பேசினார்.