உதம்சிங்

உதம்சிங் பஞ்சாபின் சுனாம் கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தார். ஜாலியன் வாலாபாக் கூட்டத்தில், உதம்சிங்கும் அவரது நண்பர்களும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியைச் செய்தனர். அங்கு ஆயிரக்கணக்கான மக்களை ஜெனரல் ஓ டயர் படுகொலை செய்தது உதம்சிங்கை பாதித்தது. அவர் இச்சம்பவத்திற்குப் பழிவாங்க பொற்கோவிலில் சபதம் பூண்டார். சோஹன்சிங் வாக்னா, கர்த்தார்சிங் சாரபா, லாலா ஹர்தயாள், ராஷ்பிஹாரி போஷ் போன்றோரால் உருவாக்கப்பட்ட கதர் கட்சியில் இணைந்தார்.  அமெரிக்காவில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பாடுபட்டார். 1927ல் பகத்சிங் அழைத்ததால் பாரதம் திரும்பினார்.

மைக்கேல் ஓ டையரைக் கொலை செய்யும் திட்டத்துடன் இத்தாலி, பிரன்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா வழியாக 1934-ல் லண்டனை அடைந்தார். மைக்கேல் ஓ டையரைக் கொல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்துக்காத்திருந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 21 ஆண்டுகள் கழித்து, 1940ல் கேக்ஸ்டன் ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்ற வந்தார் மைக்கேல் ஓ டையர். அங்கு டயரை சுட்டுக்கொன்றார் சிங். ஆனால், தப்பிக்க முயற்சிக்கவில்லை. நீதிமன்றத்தில் “நான் அவரைப் பழிவாங்க எண்ணியிருந்தேன். அவர் அதற்குப் பொருத்தமானவர்தான்” என்று கூறினார். 1940ல் ஜூலை 31 அன்று அவர் பென்டோன்வில் சிறைச்சாலையில் உதம்சிங் தூக்கிலிடப்பட்டார்

நேதாஜி உதம்சிங்கை பாராட்டினார். காந்தி வழக்கம்போல கண்டித்தார். வரலாற்று ஆய்வாளர்கள் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்திற்கு உத்தம் சிங்கால் ஏற்பட்ட உணர்ச்சி மிகவும் உதவியது என்றனர். உலகம் முழுவதும் செய்தித்தாள்கள் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுகூர்ந்து எழுதின. ஜெர்மனி வானொலி ஒடுக்கப்பட்ட மக்கள் குண்டுகளால் பேசிவிட்டனர் என்றும், பாரதத்தினர் யானையைப் போன்றவர்கள். எதிரிகளை மன்னிக்கவே மாட்டார்கள். 20 ஆண்டுகள் கழித்து பழிதீர்த்துவிட்டார்கள் என்றும் கூறியது.
உதம்சிங்கின் பிறந்த தினம் இன்று