ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை எதிர்த்து வழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான பி.விஜயகுமாரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “தி.மு.க தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட கே.எஸ் தென்னரசு ஆகியோருக்காக பிரச்சாரத்தின்போது பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரு வேட்பாளர்களுக்கும் தினமும் 10,000க்கும் மேற்பட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தினமும் தலா 550 ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கான கணக்குகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 30 நாட்களை கடந்த நிலையிலும் தாக்கல் செய்யப்படவில்லை. நட்சத்திர பேச்சாளர் அனுமதி பெறும் கட்சிகளை சார்ந்த வேட்பாளருக்கே வாக்கு சேகரிக்க வேண்டுமென்ற விதியும் மீறப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் முதல் அனைத்து அமைச்சர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியது எல்லாம் அப்பட்ட விதிமீறல்கள். தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறாமல், விதிகளை மீறி 70 தற்காலிக கொட்டகைகளை அமைத்து தினமும் வாக்காளர்காளை அங்கு தங்கவைத்து வாக்குகளை அறுவடை செய்துள்ளனர். வீரப்பன் சத்திரம் மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. இது தொடர்பாக தனியார் சேனலில் செய்தி வெளியிடப்பட்டதால், அந்த செய்தியாளர் மீது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் காயமடைந்து, ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் நடந்த நிலையில் அவை தடுக்கப்படவில்லை. எனவே, இத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படவில்லை. எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் செல்லாது, அங்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.