இவர் பார்வை மக்கள் சேவையில்!

திருவாரூரில் பிறந்தவர் தண்டியடிகள். சிறந்த சிவபக்தர். பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவர். இருந்தபோதும், தினசரி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார். கோயிலின் திருக்குளத்தை சமணர்கள் ஆக்கிரமித்து, அதனை நாசம் செய்திருந்தனர். இதனைக் கேள்விப்பட்ட தண்டியடிகள் குளத்தை சீர்படுத்த முடிவெடுத்தார்.

குளத்தில் நடுவில் ஒரு கம்பை நட்டு அதிலிருந்து கரை வரை வரிசையாக சில கம்புகளை நட்டு ஒரு கயிற்றைக் கட்டினார். குளத்து மண்ணைத் தோண்டி ஒரு கூடையில் நிரப்பி தலையில் சுமந்து கொண்டு கயிற்றைப் பிடித்தவாறே மேலே வந்து கரையில் கொட்டினார். இவ்வாறு மனதில் சிவ சிவ என்று இறைவன் நாமத்தைச் சொல்லியவாறே பல காலம் தொடர்ந்து செய்து வந்தார். குளம் சீராகத் துவங்கி தண்ணீர் பெருகத் துவங்கியது. இதனைக் கண்டு பொறாமையுற்ற சமணர்கள் அந்தக் கம்பையும் கயிற்றையும் தூக்கி வீசியெறிந்து தண்டியடிகளை அவமானப்படுத்தினார்கள்.

மனம் நொந்த அடிகள், எனக்கு விரைவில் கண்பார்வை கிடைக்கும். அதே நேரத்தில் நீங்கள் கண்பார்வையை இழப்பீர்கள்” என்று சபதமிட்டார். அப்படியெல்லாம் நடந்தால் நாங்கள் இந்த ஊரைவிட்டு ஓடிவிடுகிறோம்” என்று சமணர்கள் பதிலளித்தனர்.

அன்று இரவு சோழ மன்னனுடைய கனவில் இறைவன் தோன்றி அடிகளாருக்கு உதவிட வேண்டினார். மன்னன் அடிகளாரை சந்தித்து, நடந்த விவரங்களைத் தெரிந்து கொண்டார். அடிகளார் சிவ நாமத்தைச் சொல்லியவாறே குளத்தில் மூழ்கி எழுந்தார். அந்த விநாடியே அவர் விழிகளைப் பெற, அவரை இகழ்ந்தவர்கள் தம் விழிகளை இழந்து ஓடிவிட்டனர்.

தொண்டு செய்ய மனம்தான் வேண்டுமே தவிர உடல் ஊனம் ஒரு பொருட்டல்ல.

தண்டியடிகள் 63 நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்