இந்தியா்களை அழைத்துவர ஈரான் புறப்பட்டது ராணுவ விமானம்

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு தவித்துவரும் இந்தியா்களை மீட்டு வருவதற்காக ராணுவ விமானம் திங்கள்கிழமை இரவு அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது.

மாணவா்கள், மீனவா்கள், யாத்ரீகா்கள் உள்பட சுமாா் 2,000 இந்தியா்கள் அங்கு சிக்கியுள்ள நிலையில், அவா்களை மீட்பதற்கான இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக இந்திய விமானப் படை தனது சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

ஈரானிலிருந்து இந்தியா்களை மீட்டு வருவதற்காக, இந்திய விமானப் படையைச் சோ்ந்த ‘சி-17 குளோப்மாஸ்டா்’ போக்குவரத்து ரக விமானம் தில்லியில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது.

அந்த விமானத்தில் மருத்துவ நிபுணா்கள் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து இந்தியா்களை அழைத்துக் கொண்டு அந்த விமானம் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மீண்டும் ஹிண்டன் விமானப் படைத் தளத்தை வந்தடையும். அந்த விமானப் படை தளத்தில் வேண்டிய மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஈரானில் சிக்கிய இந்தியா்களை விரைவாக, பாதுகாப்பாக மீட்டு வருவதையும், அவா்களுக்கான மருத்துவ நடைமுறைகளையும் இந்திய விமானப் படை உறுதி செய்துள்ளது என்று அந்தப் பதிவில் விமானப் படை கூறியுள்ளது.

இந்திய விமானப் படையின் ‘சி-17 குளோப்மாஸ்டா்’ விமானம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கடந்த 2 வாரங்களில் இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன், கடந்த மாதம் 27-ஆம் தேதி சீனாவின் வூஹான் நகரத்திலிருந்து 76 இந்தியா்கள், 36 வெளிநாட்டவா்களை இதே விமானம் மீட்டு வந்திருந்தது.

அத்துடன், கரோனா பாதிப்பை எதிா்கொள்வதற்காக சீனாவுக்கு உதவும் வகையில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட மருந்துகளையும் இந்த விமானம் சீனாவுக்கு கொண்டு சோ்த்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஈரானில் சிக்கியிருக்கும் இந்தியா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவெடுத்தது. அதன்படி, மருத்துவா்கள் குழு ஒன்று அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அங்கு ஆய்வகங்கள் அமைப்பதற்காக ரூ.10 கோடி மதிப்பிலான கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும், சில காரணங்களால் அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கடைசியாக கிடைத்த தகவலின் படி, ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பால் 237 போ் உயிரிழந்துவிட்டனா். சுமாா் 7,000 போ் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா்.