ஆகாய பந்தலிலே பொன் விளையுமே

பொன் விளையும் பூமி களத்தூர் என்றெல்லாம் கேள்வி பட்டிருப்போம். மண் இல்லாமல் விவசாயம், ஆகாயத்தில் பயிரிடலாம் என்று சொன்னால், ‘இது என்ன காற்றில் கம்பு சுத்தும் விவகாரம் ‘ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது சாத்தியமே என்று நம் சென்னையிலேயே நடத்திக் காட்டிய விவசாயிகள் இருக்கிறார்கள்.  அவர்களுள் ஒருவரைப் பற்றி முன்னர் ஒரு முறை ஒரு தொலைக்காட்சியில் அறிமுகப் படுத்தியிருந்தார்கள். (விவரத்தை கட்டுரையின் இறுதியில் கொடுத்திருக்கிறேன்.

முதலில் இந்த நவீன முறை வேளாண்மையைப் பற்றி ஒரு பால பாடம். இந்த வகை விவசாயம் ஹைட்ரொபோனிக்ஸ் ((Hydroponics)-  நீரியல் வேளாண்மை என்றழைக்கப்படுகிறது. இரசாயன உணவு கொண்டு நீரில் செடி வளர்த்தல் அல்லது மண்ணுக்குப் பதிலாக ஊட்டச் சத்துள்ள நீரில் செடி பயிரிடுதல் ஹைட்ரொபோனிக்ஸ் என்று சுருக்கமாகச் சொல்லப்படுகிறது.

ஏன் சார் இந்த வேண்டாத வேலை என்கிறீர்களா?  வேண்டிய வேலைதான் அய்யா. கொஞ்சம் கேளுங்கள். நம்  நாடும் சீனாவும் தானே உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். இரண்டுமே வெகு வேகமாக நகரமயமாகிக் கொண்டு வரும் நாடுகள் அல்லவா. அதிலும் நமக்கு ஒரு கூடுதல் சிக்கல் இருக்கிறது. நம் நாட்டை விட நிலப் பரப்பு சீனாவுக்கு அதிகம். ஆகையால் இங்கே மக்கள் நெருக்கம் அதிகம். அதாவது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் நம் நாட்டில் 441 நபர்கள் வசிக்கிறோம் என்றால் சீனாவில் 148 நபர்கள் தான் வசிக்கிறார்கள். (கிட்டத்தட்ட அவர்களைவிட ஜன நெருக்கடி நமக்கு 3 மடங்கு அதிகம்). இவற்றினால் பயிரிடும் பரப்பு குறைகிறது, மக்கள் தொகையோ கூடிக் கொண்டிருக்கிறது எனும்போது பிரச்சினையின் பரிமாணம் புரிகிறதல்லவா?

சிக்கலைப் புரிந்து  கொண்டு சீனா பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த துறையில் கவனத்தைச் செலுத்தத் துவங்கி பல படிகள் முன்னேறி மாடித் தோட்டம், செங்குத்தாக தூண்களில் தோட்டம் என்று கொழிக்கிறார்கள். இந்த நிலையில் நாம் பின் தங்கி விடலாமா? நம் நாட்டிலும் தனியார்  ஒரு சிலர் சொந்த முயற்சியில்  அங்கொன்றும் இங்கொன்றுமாக  நல்முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

இவற்றை விரிவுபடுத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அறிவியல் -தொழில் ஆராய்ச்சி நிலையம்  எனப்படும்   கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் தீர்மானித்தது. அந்நிலையம் அவர்களின் துணை அமைப்பான இன்ஸ்டிடியூட் ஆப் இமாலய பயோசோர்ஸ் டெக்னாலஜி (சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.எச்.பி.டி ) உடன் இணைந்து  ஹைட்ரோபோனிக் சாகுபடி முறை குறித்து நான்கு நாள் பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்தது. இத்திட்டத்தில் இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு, மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களைச் சேர்ந்த 43 முற்போக்கான விவசாயிகள், வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்களுக்கு தொழில்நுட்ப அறிவு மற்றும் ஹைட்ரோபோனிக் முறையில்  தாவர பரப்புதலின் செயல்முறை பயிற்சியும் வழங்கப்பட்டது ”என்று சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.எச்.பி.டி பயிற்சி அமைப்பாளர் டாக்டர் பவ்யா பார்கவ் தெரிவித்தார்.

நகர்ப்புற விவசாயத்திற்கும் சிறிய அளவிற்கும் ஏற்ற சிறிய குறைந்த விலை மாதிரி  ஹைட்ரோபோனிக் முறையை உருவாக்க பாலம்பூர் உறுதியாக உள்ளது என்று சி.எஸ்.ஐ.ஆர் விஞ்ஞானி டாக்டர் ஆஷிஷ் வர்காட் கூறினார்.

மேலும் விவரமறிய நினைப்பவர்கள், கீழ்க்கண்ட இணைப்பில் சென்னையில் நடந்து வரும் ஒரு ஹைட்ரொபோனிக்ஸ் பண்ணையின் செயலைக் கண்டு தெரிந்து கொள்ளலாம்.

(https://www.youtube.com/watch?v=FSVwpIm4MFI)