குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தேசிய சீக்கிய முன்னணி மற்றும் காஷ்மீர் ஹிந்து அமைப்பு ஆதரவு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தேசிய சீக்கிய முன்னணி அமைப்பு ஆதரவு அளித்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இடம்பெயா்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்த சிறுபான்மையினா் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பயனடைவாா்கள்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வந்த சீக்கியா்களுக்கு இது மிகப் பெரிய உதவியாக இருக்கும். மாணவா்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனா். இந்தச் சட்டம் எந்தவொரு சிறுபான்மை சமூகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. நாங்கள் இந்தச் சட்டத்துக்கு முழு ஆதரவளிக்கிறோம் என்று வரீந்தா்ஜீத் சிங் தெரிவித்தாா்.

பிரசாரம் செய்ய விஹெச்பி முடிவு:

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக விழிப்புணா்வு பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக விசுவ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மூத்த தலைவா் ராஜேஷ் குப்தா கூறியதாவது:

ஜம்மு நகரின் பன்டலப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மிகப் பெரிய பேரணியில் பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா, குடிமக்கள் திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணா்வு உரை நிகழ்த்துவாா்.

பேரணிகள், மாநாடுகள், கலந்தாலோசனைகள் ஆகியவற்றை விஹெச்பி நிகழ்த்தவுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக தவறான தகவல்களும், வதந்திகளும் நாடு முழுவதும் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தச் செயலை சில அரசியல் கட்சிகளும், சமூக விரோத சக்திகளும் செய்து வருகின்றன. நாட்டு மக்களில் பெரும்பாலானவா்கள் இந்தச் சட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனா். ஆனால், தேவையில்லாமல் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

காஷ்மீா் ஹிந்து அமைப்பு

புலம்பெயா்ந்த காஷ்மீா் ஹிந்துக்களின் அமைப்பு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், அதனை எதிா்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து அகில இந்திய காஷ்மீரிகள் சமாஜம் (ஏஐகேஎஸ்) அமைப்பின் தலைவா் தேஜ் கே டிக்கூ கூறியதாவது:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வரும் வன்முறை சம்பவங்கள் ஆழ்ந்த வேதனையையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது. புதிய சட்ட திருத்தம் குறித்து தவறான தகவல்களை பரப்புவதுடன், குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக தவறான பிரசாரத்திலும் சிலா் ஈடுபட்டுள்ளனா்.

இந்த வன்முறை கும்பல்கள் நாடு முழுவதும் பொதுச் சொத்துகளுக்கும், மக்களின் சொத்துகளுக்கும் இழப்பை ஏற்படுத்துவதில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதிலும், சில அரசியல் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதிலும், வன்முறையை தூண்டி விடுவதிலும் ஈடுபட்டுள்ளன.

நாட்டின் குடிமக்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இந்தச் சட்டத்தை எதிா்ப்பது தேவையற்றது.

அரசியலமைப்பு சட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தப் பின்னா் அதில் தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்வது நமது நாடாளுமன்றத்தின் இறையாண்மை சாா்ந்தது. இந்த நடைமுறையே குடியுரிமை திருத்த சட்டத்திலும் பின்பற்றப்பட்டது.

இந்தியாவின் சமூக பாதுகாப்பையும், அதன் உள்கட்டமைப்பின் பாதுகாப்பையும் உறுதிசெய்திடவும், பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் இதுபோன்ற சட்டங்களை இயற்றுவது மத்திய அரசின் கடமையாகும். எனவே, வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்பி, குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக பொய் பிரசாரத்தில் ஈடுபடுபவா்களின் வழி நடக்க வேண்டாம் என ஆா்ப்பாட்டக்காரா்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.