அற்புதமான அபத்தம்

ஆகஸ்ட்மாதம் 20ம்தேதி சட்டத்துடன் ப.சி ஆடிய கண்ணாமூச்சி விளையாட்டு முடிவுக்கு வந்தது. கேட்ட போதெல்ல்லாம் கேட்ட அளவிற்கு அவருக்கு கிடைத்து வந்த முன்ஜாமீன் நின்றது. அவருக்கு அதிர்ச்சி கொடுத்தவர் தில்லி உயர்நீதிமன்ற நீதிஅரசர் சுனில்கவுர். ப சிதம்பரம் – காங்கிரஸ் ஆதரவாளர்கள் வைக்கும் முதல் குற்றச்சாட்டு என்ன? ஐஎன்எக்ஸ் ஊடக வழக்கில் முன்ஜாமீன் மனுவின் மீதான வாத – பிரதிவாதங்கள் ஜனவரி மாதத்திலேயே முடிந்துவிட்ட நிலையில் எதற்காக தீர்ப்பளிக்க நீதியரசர் சுனில் ஏழு மாதங்கள் எடுத்துக்கொண்டார் ?

இரண்டாவது விமர்சனமாக காங்கிரஸ் கூறுவது: ” பாருங்கள், நாங்கள் கணித்தபடியே ஓய்வு பெற்றபின் உடனடியாகவே அவருக்கு அரசாங்க பதவி கொடுக்கப்பட்டுள்ளது. “உண்மைதான், சுனில் கவுர் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் தடுப்புச் சட்ட விவகாரத்திற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும், பசி -க்கு முன்ஜாமீனை ரத்து செய்த இரண்டு நாளில். வெறும் வாயை வென்றவர்களுக்கு அவல் (அதுவும் வெல்லம் தேங்காய்யெல்லாம் துருவிச் சேர்த்து போட்டு கிண்ணத்தில் வைத்துக் கொடுத்ததுபோல )

மேலாகப் பார்த்தால் இரண்டுமே தவறாகத்தான் தெரியும், அதாவது ஏழு மாதம் எடுத்துக்கொண்டது, அவருக்கு பதவி ஓய்வு பெற்ற உடனடியாகவே மீண்டும் அரசு பதவி கொடுத்தது என்று இரண்டு குறைகள் சொல்லப்படுகின்றன. இந்த கட்டுரையாளனாகிய எனக்கு நீதியரசர் சுனில் கவுர் மீது ‘ ஏழு மாதங்கள் எடுத்துக்கொண்டாரே ‘ என்ற வருத்தம் இருந்தது. பின் என்ன, அப்பொழுதே பிப்ரவரி மாதம் 15 தேதிக்குள் தீர்ப்பளித்திருந்தால் ப. சி மீதும் அவர் மகன் கார்த்திக் மீதும் சட்டத்தின்பிடி இறுகி இருக்கும். யார் கண்டது ராகுல் பசியின் மிரட்டலுக்கு அடி பணிந்திருக்க வேண்டியிருக்காது, கார்த்திக்கிற்கு சிவகங்கை வேட்பாளர் வாய்ப்புகிட்டாமல் போயிருக்கலாம் அல்லவா?

சற்று நிதானமாக, இரண்டையும் பொருத்திப்பார்த்தால்தான் எந்த காரியத்திற்கும் காரணம் ஒன்று உண்டு என்ற உண்மை விளங்கும். அந்த அடிப்படை உண்மை இந்த விஷயத்திலும் சுனில் கவுருக்கு பதவி அளித்த நியாயம் புலப்படும்.

ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் நடந்துள்ளதாக சிபிஐம் அமலாக்கத்துறையும் கூறும் பலமுறைகேடுகளில் ஒன்று கருப்பு பணத்தை வெள்ளயாக்குவது. கருப்பு பணத்தை வெள்ளயாக்குவதைக் கண்டுபிடிப்பது, அவற்றை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது எல்லாம் மிகவும் சிக்கலான சமாச்சாரம்.  ஏனென்றால் இந்த பொருளாதார குற்றங்களை நடத்துவது குப்பனும் சுப்பனும் அல்ல. செய்பவர்கள் பெரு முதலாளிகள், சமூகத்தில் அந்தஸ்து பெற்றவர்கள், ஊருக்கு உழைப்பவர்கள் போன்ற கவுரமான முகமூடி அணிந்துள்ளவர்கள், பல நாடுகளில் செல்வாக்கு பெற்றவர்கள், அரசியல் பின்புலம்- பக்கபலம் எல்லாம் உள்ளவர்கள். ஆகையால் இவர்கள்மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கத் துவங்கினாலே இவர்கள் மோப்பம் பிடித்துவிடுவார்கள், அவர்களுக்கு முன்அறிவிப்பு கொடுத்து தப்பித்துச்செல்ல- தடயங்களை காணாமல் போகச்செய்ய, சாட்சிகளை மௌனமாக்க எல்லா உதவிகளும் அளிக்க அமைப்புகளின் உள்ளேயே இவர்களுக்கு ‘கையாள்கள்’ இருக்குமே!

இவற்றை கண்டுபிடித்து நிரூபிக்க, பலநாட்டு அரசுகள், அவற்றின் புலனாய்வுத்துறைகள், வங்கிகள்,  நீதிமன்றங்களின் கனிவுப்பார்வை – ஒத்துழைப்பு எல்லாம் அத்தியாவசியம். இந்த பின்னணி குறித்த முழுமையான விஷயங்களை அறிந்துகொண்டால்தான் நீதிபதி கவுர் ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் ஏழு மாதம் எடுத்துக்கொண்டதன் நியாயம் புரியும். அப்படி துருவித் துருவி அவர் நுணுக்கமாய் இந்த வழக்கை படித்ததால் தான் அவர் ஜாமீன் மறுப்பிற்கு அழுத்தமாய் தன்னுடைய ஆட்சேபணைகளை பதிவு செய்துள்ளார். பசி-யை ‘ மூலகாரணகர்த்தா(kingpin) ‘ என்று விவரிக்கிறார்.

இங்கு ஒன்றை நாம் இங்கு கவனிக்க வேண்டும், கருப்பு பணத்தை வெளுப்பாக்கும் குற்றச் செயல்கள் பல நூறாண்டுகளாக நடப்பவைதான். ஆனால், தடைச் சட்டம் வந்து இருபது ஆண்டுகள்கூட நிறைவடையவில்லை. ஆக, குற்றச் செயல்புரிபவர்கள் அனுபவம் பெற்ற பழம்பெருச்சாளிகள்,  துணைபோகும் வழக்கறிஞர்கள் அசகாயசூரர்கள், ஆனால் நீதிமன்றங்களுக்கு அனுபவம் குறைவு. எப்படி எல்லாம் குற்றம் புரிபவர்களுக்கு நீதி சாதமாக இருக்கிறது பாருங்கள் ? இந்த நிலையில்தான் சுனில் கவுர் போன்ற ஒரு முதிர்ந்த நீதி அரசர் ‘ வாராது வந்த  மாமணி போல்’ அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். சரியாகப் புரிந்து கொள்ளுங்கள், தனக்காக அல்ல, சட்ட நடைமுறைகளை வலுப்படுத்தவே இந்த வழக்கை அவர் அலசி ஆராய்ந்து அதன் அடியாழம் வரை சென்றுள்ளார் என்று நான் நினைக்கிறேன்.

ஆயிரம் பழைய வழக்குகளைப் பற்றி சட்ட புத்தகத்தில் படிப்பதைவிடவும்  , ஒரு உயிருள்ள கண் எதிரில் உள்ள வழக்கைக் கூர்ந்து கவனிப்பதும், வாத- பிரதிவாதங்களை அலசி ஆய்வதும் பலமடங்கு பயனுள்ளது. நிறைய கற்றுக்கொள்ளலாம். அந்த வாய்ப்பை இந்த வழக்கில் கவுருக்கு வழங்கியுள்ளது. ஆகவே, கருப்பு பணத்தை வெளுப்பாக்கும் விவகாரத்தைப் பற்றி, அவற்றை சட்ட ரீதியாக தடுக்கும் அணுகுமுறைகளை எவ்வாறு பலப்படுத்துவது, குற்றவாளிகளுக்கு எவ்வாறு விரைந்து தண்டனைக்குள்ளாக்குவது போன்றவற்றில் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்க வாய்ப்புஉள்ளது.

அதனால்தான், மிகச் சரியாக மோடி அரசு அவரை கருப்பு பணத்தை வெளுப்பாக்கும் நடைமுறைகளை தடுக்கும் சட்டம் தொடர்பான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக்கியுள்ளதாக நான் கருதுகிறேன். அவர் பெற்ற அனுபவ அறிவை திறமையை தக்கவிதத்தில் பயன்படுத்திக் கொள்வதுதானே ஒரு நல்ல அரசின் செயல்தானே? இதில் என்ன குற்றம் கண்டீர்? அரசு அதிகாரத்தாலும் வாத திறமையாலும் பலரை பல வழக்குகளில் ஏமாற்றி வெற்றி கண்டவர்கள் இந்த வழக்கில் தோற்று போனதும் புலம்புகின்ற புலம்பல் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஆக காங்கிரஸ் ப சிதம்பரத்தைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு அற்புதமாக வாதாடுவதாக ஊடகங்களில் வேண்டுமானாலும் பாராட்டு பெறலாம், ஆனால் இந்த அபத்தங்கள் எல்லாம்   ப சி -க்கு ஆபத்தில்தான் முடியும் என்பது திண்ணம்.