அயோத்தி ராமர் ஆலய போராட்டத்தின் முன்னோடிகள்

அயோத்தி ஸ்ரீராமஜன்மபூமி 500 வருட மீட்புப் போராட்டத்தில் பெயர் தெரியாத ஊர் தெரியாத பலர் ஈடுபட்டுள்ளனர். எத்தனையோ பேர்களின் பெரும் தியாகத்தால் தொடர் முயற்சியால் இப்போராட்டம் உயிரோட்டத்துடன் செயல்பட்டு வந்துள்ளது. அத்தனை தியாகிகளும் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள்.
நாடு விடுதலை பெற்ற பிறகு நடைபெற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்ட சிலரின் பங்களிப்பினை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களில் முக்கியமானவர்கள் 1990 கரசேவையின் போது உயிர்த்தியாகம் செய்த கோத்தாரி சகோதரர்கள், குருதத் சிங், ஆபிராம் தாஸ், பாபா ராகவதாஸ், கே.கே.நாயர், மஹந்த் ராமச்சந்திரதாஸ் பரமஹம்ஸர், தாவுதயாள் கன்னா, மஹந்த் திக்விஜய் நாத், மஹந்த் அவைத்யநாத்,  ஹனுமான் பிரசாத் போத்தார், கர்பாத்ரிஜி மஹராஜ், ஜகத்குரு ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதி, பெஜவார் ஸ்வாமிஜி, தேவரஹ பாபா, ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர், மோரோபந்த் பிங்களே, அசோக் சிங்கல், தேவகி நந்தன் அகர்வால், விஷ்ணு ஹரி டால்மியா, ஸ்வாமி வாமதேவ் போன்றவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அவர்களைப் பற்றிய சில தகவல்களை தொடர்ந்து காண்போம்.
குருதத் சிங்
சிறுவயதிலிருந்தே ராம பக்தர்.  ஆண்டு
தோறும் அயோத்தியா செல்வது வழக்கம். அலஹாபாத் பல்கலைக்கழக பட்டதாரி. சிவில் சர்விஸ் தேர்வில்  வெற்றி பெற்று சிட்டி மாஜிஸ்திரேட் ஆனார். ஆங்கில பாணி உடை பழக்க வழக்கங்களை விரும்பாதவர். பாரம்பரிய பாரதிய உடைகளையே அணிவதில் நாட்டம் கொண்டவர்.  ஆங்கிலேய பாணியில் தொப்பி வைக்க மறுத்தவர்.
பரேலியில் அரசு வேலையில் இருந்தபோது தொப்பி  அணியாததால்  ஆங்கிலேய அதிகாரியான Michael Netherworldக்கு இவர் மீது அதிகமான கோபம். இருந்த போதிலும் தொடர்ந்து பாரதிய வழக்கப்படி தலைப்பாகை அணிந்தே அலுவலகம் சென்றுவந்தார். அலுவல் இடம் மாற்றம் பெற்று  சிட்டி மாஜிஸ்ட்ரேட்டாக பைசாபாத் (அயோத்தி) வந்தார். ராமர் பிறந்த ஜென்மபூமியில் ராம்லல்லாவின் விக்ரஹம் இல்லையே என்கிற ஒரு ஏக்கம் மனதில் இருந்து வந்தது. இவரது நண்பர்  அபிராம்தாஸ் தனது கனவில் ராமர் தோன்றியத்தை இவரிடம் தெரிவித்தார். இவரும் தனது கனவிலும் ஸ்ரீராமபிரான் தோன்றியதையும் கூறினார். இருவரும் சேர்ந்து கனவினை நனவாக்க விரும்பி திட்டம் தீட்டினர்.
குருதத் சிங்,  அபிராம்தாஸ், ஹிந்து மஹாசபா தலைவரும் கோரக்நாத் பீடாதிபதி மஹந்த் திக்விஜய்நாத்துடன் சில சாதுக்கள் இணைந்து ரகசியமாகத் திட்டமிட்டு 1949 டிசம்பர் 22 நள்ளிரவு 3 மணி அளவில் ஜன்ம பூமியில் ராம்லல்லாவை  பிரதிஷ்டை செய்து ‘ஜெய்சியாராம்   ஜெய்சியாராம்’ கோஷம் எழுப்பி மணி அடித்தனர்.  வாழ்வின் லக்ஷியம் நிறைவேறிவிட்டதாக தெரிவித்த குருதத் சிங், 6 மாதம் சென்ற பிறகு தனது சிட்டி மாஜிஸ்ட்ரேட் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பின்னர் ஹிந்து மஹாசபாவில் இணைந்தார்.
பாரதிய ஜனசங்கம் தொடங்கிய பிறகு அக்கட்சியில் இணைந்து  பைசாபாத் மாவட்டத் தலைவர் ஆனார். சட்டத்திற்கு விரோதமாக அயோத்தியில் ராம லல்லாவின் விக்கிரஹத்தை வைத்ததாக தயாரிக்கப்பட்ட குற்றப் பத்திரிகையில் குருதத் சிங் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் தனது வாழ்வின் லக்ஷியம் நிறைவேறியதில் பெரும் மகிழ்ச்சியுடன் தனது இறுதிநாள் வரை வாழ்ந்தார்.
அபிராம் தாஸ்
இவரது பெயர் அபிநந்தன் மிஸ்ரா. பீஹார் தர்பங்கா மாவட்டத்தில் ரஹாரி கிராமத்தில் பிறந்தவர். சிறந்த மல்யுத்த வீரர். இளைஞர்களுக்கு மல்யுத்த பயிற்சி அளித்திட அகாடாக்களை தோற்றுவித்தவர். மஹந்த் சரயுதாஸ் பீகாரில் இருந்து அயோத்தி வந்த ஆபிராம்தாஸின் குரு. இவர் அயோத்தியில் மிகப் புகழ்பெற்ற ஹனுமான் கர்ஹி கோயிலை நிர்வாகம் செய்துவந்த சாது. அவரிடம் தீட்சை பெற்று ராம் சந்தாணி சம்பிரதாய சாதுவாக வாழ்ந்தவர்.
ராம் சந்தாணி சாதுக்கள் வெள்ளையாடை அணிந்து துறவியைப் போன்று வாழ்பவர்கள். குருவின் மறைவிற்குப் பின் ஹநுமான்கர்ஹி கோயிலின் நிர்வாகம்  அபிராம்தாஸ் வசம் வந்தது. ஹநுமான் கர்ஹி கோயிலேயே வசித்து வந்தவர். நாள்முழுவதும் அலைந்து கொண்டிருப்பார். இரவு ஓய்வு எடுக்க மட்டுமே அங்கு செல்வார். வேத பாடசாலை, ஸம்ஸ்க்ருத வகுப்புகள், கோசாலை போன்றவைகளை அங்கு நடத்தி வந்தவர். அயோத்தி மற்றும் அதன்  சுற்று வட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தவர். மஹந்த் ராமச்சந்திர பரமஹம்சரின் நண்பர்.
பரமஹம்சர்  ஹிந்து மஹாசபாவின் நகரத் தலைவர். இவர் அக்கட்சியில் சாதாரண உறுப்பினர். ராம ஜன்ம பூமியை மீட்டிட வேண்டும் என்பதில் தீராத வேட்கை கொண்டவர். இவர் தனது கனவில் ராமர் தோன்றியதை நீதிபதியாக இருந்த குருதத் சிங்கிடம் பகிர்ந்து கொண்டார்.
இவர்தான் 1949ம் வருடம் ஜன்ம பூமியின் மேல் ஆக்கிரமிப்பாளர்களால் கட்டப்பட்டிருந்த நடு குமட்டத்தின் (Central Dome) நேர் கீழேதான் ஸ்ரீராமர் பிறந்த இடம் என்று அடையாளம் காட்டி அவ்விடத்தில் ராம் லல்லாவின் சிலையை பிரதிஷ்டை செய்தவர். இவருடைய நண்பரும் ராம் சந்தாணி சாதுவுமாகிய விருந்தாவன் தாஸ் ராம் லல்லாவின் சிலையை எடுத்துவந்தவர். இவர்கள் இருவரும் நிர்வாணி அகாடாவை சேர்ந்தவர்கள். முதல் தகவல் அறிக்கையில் (FIR) அபிராம்தாஸின்  பெயர்தான் முதலாவதாக இடம்பெற்றிருந்தது. 1949ல் அயோத்தி ராம ஜன்ம பூமியில் ராம்லல்லாவை பிரதிஷ்டை செய்திருந்தாலும், பின்னர் அரசு மேற்கொண்ட நட வடிக்கைகளால் ஆலயம் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகிவிட்டது. அபிராம் தாஸ் தனது கடைசி காலம்வரை ராம ஜன்ம பூமியை மீட்டிட வேண்டும் என்பதில் ஆர்வமுடன் பணியாற்றி வந்தவர்.
1981 டிசம்பர் 3ம் தேதியன்று அவரது ஆன்மா ஸ்ரீராமனின் சரணத்தில் அமைதி யடைந்தது. அவரது பூத உடல் ராம் சந்தாணி சம்பிரதாயப்படி இறுதி சடங்குகள் செய்து சரயு நதியில் விடப்பட்டது.
பாபா ராகவ தாஸ்
பைசாபாத் தொகுதியில் 1948ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில்  இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றிபெற்றவர் பாபா ராகவதாஸ். அத்தொகுதியில் நேருவின் ஆதரவுடன் போட்டி இட்ட சோசலிஸ்ட் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் மார்க்சிய  சிந் தனாவாதியுமான நரேந்திரதேவ் தோல்வியைத் தழுவினார். பைசாபாத் முஸ்லிம்கள்  அனை வரும் நரேந்திரதேவிற்கு ஆதரவாக வாக்கு அளித்தனர். அயோத்தி ஹிந்து வாக்காளர்கள் அனைவரும் பாபா ராகவதாஸிற்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றிபெற வைத்தனர்.
அப்போது உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த கோவிந்த் வல்லப பந்தும் பாபா ராகவதாஸ் வெற்றி பெறுவதையே விரும்பினார். கோவிந்த் வல்லப பந்த் அயோத்தியில் ராம ஜன்ம பூமிக்கு ஆதரவாகவே இருந்து வந்தார். அதனால் நேருவின் கோபத்திற்கு ஆளானாலும் நேருவால் அவரை ஒன்றும் செய்ய இயலவில்லை. பந்தின் கையே உத்திரபிரதேசத்தில் அப்போது ஓங்கியிருந்தது. பாபா ராகவதாஸின்  மிக நெருங்கிய நண்ப ரான ஹனுமான் பிரசாத் போத்தார் நீண்ட காலம் செய்து வந்த உதவி  ராம ஜன்ம பூமி விடுதலை இயக்கத்திற்கு  பேருதவியாக அமைந்தது.
கே.கே.நாயர்-சகுந்தலா நாயர்
கண்டங்களத்தில் கருணாகரன் நாயர் என்பதன் சுருக்கமே கே.கே.நாயர்.
11 செப்டம்பர் 1907ல் குட்டநாடு பகுதியில் பிறந்தவர். துவக்கக் கல்வி சனாதன தர்ம வித்தியாசாலை ஆலப்புழை, ஸ்ரீமூலம் விலாசம் உயர்நிலைப் பள்ளி திருவனந்தபுரம், சயின்ஸ் காலேஜ் திருவனந்தபுரம் (மெட்ராஸ் பல்கலைக் கழகம்) தொடர்ந்து பாரசேனி கல்லூரி (Bara Seni College) அலிகர், ஆக்ரா பல்கலைக் கழகம். பின்னர் இங்கிலாந்து சென்று லண்டன் பல்கலைக் கழக கல்லூரியில் ஐ.சி.எஸ். தேர்ச்சி பெற்று  1930ம் வருடம் சிவில் சர்வீஸில் சேர்ந்தார். பழமொழிகள் அறிந்தவர். மலையாளம், தமிழ், ஆங்கிலம், சம்ஸ்க்ருதம், ஹிந்தி, உருது, பிரெஞ்சு, லத்தீன், ருஷ்யன், ஸ்பானிஷ், ஜெர்மன் மொழிகள் அறிந்தவர். மொழிகள் பற்றி ஆராய்ச்சி செய்தவர். துவக்கத்தில் உத்தரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் பணியாற்றிய கே.கே.நாயர் 1949ம் வருடம் டெபுடி கமிஷனராகவும் டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்ட்ரேட் ஆகவும் பைசாபாத்திற்கு பணி மாற்றலாகி வந்து சேர்ந்தார். இவரின் கீழ் சிட்டி மாஜிஸ்ட்ரேட்டாக பணியாற்றியவர்  குருதத் சிங்.
அயோத்தி ஜன்மஸ்தான வளாகத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி அறிக்கை ஒன்றிணைக் கேட்ட மாநில அரசின் கோரிக்கைக்காக தனது கீழ் பணியாற்றிய குருதத் சிங்கிடம் அப்பணியை ஒப்படைத்தார். நேரில் சென்று ஆய்வுசெய்த பின்பு அறிக்கை சமர்ப்பித்த குருதத் சிங், ராமர் பிறந்த இடத்தில் மக்கள் நன்கு தரிசனம் செய்யுமாறு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.  மத்தியில் பிரதமராக இருந்த நேருவின் அரசாங்கம், ஜன்ம பூமியில் இருந்து விக்கிரகத்தை அகற்றி பக்தர்களை வெளியேற்றுங்கள் என்று உத்தரவிட்டது. டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்ட்ரேட்டான கே.கே.நாயர் அதற்கு உடன்படவில்லை.  அயோத்தியா ஆலயத்தில் இருந்து ஹிந்துக்களை வெளியேற்ற முடியாது எனக்கூறி, கோயிலுக்கு சொந்தக்காரர் அந்த இடத்தில் பூஜை செய்து வருகிறார். அகற்றினால் வகுப்புக் கலவரம் வரும் என்று தெரிவித்து நேருவின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்துவிட்டார்.
உத்தரபிரதேச முதல்வர் கோவிந்த் வல்லப பந்த் இவரைப் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைத்து உத்தரவிட்டார். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று  மீண்டும் அப் பதவியில் அமர்ந்தவர். சில மாதங்களுக்குப்  பிறகு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்யத் துவங்கினார்.
1952ம் வருடம் பாரதிய ஜனசங்கம் துவங்கப்பட்ட போது தனது மனைவியுடன் அதில் சேர்ந்தார். 1967ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கே.கே.நாயர் பாஹ்ரைச் (Bahraich) தொகுதியிலும், அவரது மனைவி சகுந்தலா நாயர் கைசேர்க்கஞ்  (Kaiserganj) தொகுதியில் இருந்தும் பாரதிய ஜனசங்கம் சார்பில் வெற்றி பெற்றனர்.  சகுந்தலா நாயர் 1952ல் ஹிந்து மஹாசபை வேட்பாளரா கவும், 1967-1971ல் பாரதிய ஜனசங்கம் சார்பிலும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது வாகன ஓட்டுனரும் பைசாபாத் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு ஜனசங்கம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இறுதிவரை அயோத்தி மக்களால் நாயர்சாஹிப் என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

இந்திரா காந்தியின் நெருக்கடிநிலை காலத்தில் கே.கே.நாயரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையிலிருந்து விடுதலையான அவர் 7 செப்டம்பர் 1977ம் வருடம் காலமானார். கணவன் மனைவி இருவரும் தங்களது கடைசிக்காலம் வரை அயோத்தி மக்களிடமும் பாரதிய ஜனதாக் கட்சியின் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தனர்.  உத்திரபிரதேச மக்களால் பெரிதும் பாராட்டப்பட்ட கே.கே.நாயரைப் பற்றி கேரள மக்களுக்கு எதுவும் தெரியாது. சிறிது காலம் சென்ற பின்பு கேரளாவில் அவர் பிறந்த வீட்டினை சிலர் பராமரித்து அதில்  கே.கே.நாயர் நினைவு  அறக்கட்டளை துவங்கி சில பணிகள் செய்து வந்துள்ளனர்.
பதவியில் இருந்தபோதும் பதவியை விட்டு விலகிய போதும் அயோத்தியில் ராம ஜன்ம பூமி ஹிந்துக்களுக்கு சொந்தமானது. அதில் ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்று விரும்பியவர். அதற்காக வேலை செய்தவர் கே.கே.நாயர். அவரது கனவு தற்போது நிறைவேறியுள்ளது.

                                                                                                                                                                                                                          முன்னோடிகள் வரலாறு தொடரும்…

                                                                                                                                                                                                                                                              நா. சடகோபன்