உறங்கும் வரம் பெற்ற ஊர்மிளா

கைகேயியின் உத்தரவின்படி ஸ்ரீராமன் கானகம் செல்ல தயாரானான். உடன் சீதையும் செல்கிறாள். இதனை அறிந்த இளவல் லட்சுமணன் தொண்டாற்ற தானும் உடன் வருவதற்கு ராமனுடன் வாதாடி ஒப்புதல் பெற்றான்.
ராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கப்போவதில்லை என்பதும் அண்ணனுடன் தானும் காட்டிற்கு செல்வதும் தன் மனைவிக்குத் தெரிய வாய்ப்பில்லை என்பதினால் ஊர்மிளையின்  மாளிகையை நோக்கிச் சென்றான் லட்சுமணன். ”நாளை ஸ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் இல்லை. கைகேயியின் உத்தரவின்படி அண்ணன் சீதையுடன் கானகம் செல்கிறார். பரதன் முடிசூடப்போகிறார்”. என்று சொன்னான்.
சீதையின் பண்புநலன்களை அறிந்த ஊர்மிளா சீதை எடுத்த முடிவு சரிதான் என்றாள். நானும் அண்ணலுடன் கானகம் செல்கிறேன் என்றான் லட்சுமணன். இப்போது நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து தரவேண்டும் என்று கேட்டாள் ஊர்மிளா. சத்தியமா என்று ஆச்சரியத்துடன் வினவினான் லட்சுமணன்.
“அண்ணல் ராமனுக்கும் அன்னை சீதைக்கும் நீங்கள் ஆற்றும் சேவைக்கு பங்கம் ஏதும் வந்துவிடக்கூடாது. அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. எனவே நீங்கள் அயோத்தி திரும்பும் வரை என்னைப் பற்றி நினைக்கவே கூடாது” என்றாள். நெகிழ்ச்சியுடன் ஊர்மிளையை பார்த்த லட்சுமணன், இப்படி ஒரு குணவதியை மனைவியாய் கிடைக்க என்ன தவம் செய்தேனோ என மனதிற்குள் மகிழ்ந்தான்.
கணவன் அயோத்தி திரும்பும் வரை நித்திரையில் ஆழ்ந்திட  தனக்கு வரம் அளிக்கவேண்டும் என குலதேவதையிடம் வேண்டி உறக்கத்தில் ஆழ்ந்தாள் ஊர்மிளா.