அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சர்ச்சைக்குரிய நிலத்தை தரத் தயார்

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குத் தங்கச் செங்கல் வழங்கத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். முகலாய வம்சாவளியைச் சேர்ந்த இளவரசர் என உரிமை கோரும் ஹபீபுதீன் டூஸி. அதேவேளையில் பாபர் மசூதி – ராம் ஜென்ம பூமி நிலத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். ஏனெனில் முகலாய மன்னர் பாபரின் வாரிசு நானே என அவர் கூறியுள்ளார்.

“உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை என்னிடம் ஒப்படைத்தால் அதை நானே ராமர் கோயிலுக்குத் தானமாக வழங்குவேன். பாபர் மசூதி அமைக்கப்பட்ட இடத்தில்தான் ராமர் கோயில் இருந்தது என்ற இந்துக்களின் நம்பிக்கையை உணர்வுகளை நான் மதிக்கிறேன்” என்றார்.

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகக் கூறி, கடந்த 1992-ம் ஆண்டு, டிச.6-ல் கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தினசரி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள, தங்கச் செங்கல் ஒன்றை அன்பளிப்பாக வழங்க டூஸி முன்வந்துள்ளார்.

இவர், இதுவரை அயோத்திக்கு மூன்று முறை சென்றிருக்கிறார். அங்குள்ள தற்காலிக ராமர் கோயிலில் வணங்கியிருக்கிறார். கடந்த ஆண்டு ராமர் கோயில் சென்றபோதும் அயோத்தி நிலத்தை கோயிலுக்கே அளித்துவிடுவதாக அவர் கூறியிருந்தார். மேலும், ராமர் கோயில் சிதைக்கப்பட்டதற்கு மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.