அனைவரும் பருகுவோம் அற்புத யோக அமுதம்!

ஒருபுறத்தில் நாகரீகமும் தொழில்நுட்பமும் அசுரவேகத்தில்  வளர்ந்து வருகின்றபோதும் மறுபுறம் நமது முன்னோர்கள் பின்பற்றிய வாழ்க்கைமுறையில் அடங்கியுள்ள மகத்துவம் அதிகளவில் உணரப்பட்டு வருகிறது. ஏனெனில், எளிமையான கட்டுக்கோப்பான வாழ்க்கைமுறையில் கிடைக்கும் இன்பமே மேலானது என்பதை பல அறிஞர்களும் வலியுறுத்தி வருகின்றனர். யோகம் இதற்கு வழிவகுக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு யோகா என்றாலே அது உயர்வகுப்பினருக்கு மட்டுமே என்கிற எண்ணம் தற்போது உடைத்தெறியப்பட்டு வருகிறது. ஒரு மனிதன் தான் செய்யக்கூடிய தொழில் எதுவாக இருந்தாலும் அதற்குரிய  யோகப்பயிற்சிகளை செய்ய முடியும். மேலும் அவரவர் வேலையில் குறிப்பாக மருத்துவர், ஆசிரியர், பொறியாளர், வழக்கறிஞர், பாடகர்கள், விளையாட்டு வீரர், விவசாயி, நெசவாளர், மீனவர், கூலித்தொழிலாளர் என தொழில் சார்ந்து ஏற்படக்கூடிய சிரமங்களுக்கு தகுந்தாற்போல் ஆசனங்கள் செய்து அச்சிரமங்களிலிருந்து விடுபடுவது சுலபம்.

மருத்துவர்

இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் மருத்துவத் துறைக்கு சவாலாக இருப்பது யோகா. பல மருத்துவர்களாலும் குணப்படுத்த முடியாத வியாதிகளும் மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களின் நோயும் யோகாவால் தீர்கின்றன.  இப்படிப்பட்ட சூழலில் பல மருத்துவர்களும் யோகாவை பரிந்துரைக்கின்றனர். மேலும் பல மருத்துவமனைகளும் யோக சிகிச்சையை அறிமுகப்படுத்தியுள்ளன.  நோயாளிகளுக்கு பரிந்துரைக்கவும் அறிவுரை கூறவும் மருத்துவர்களும் யோகா அனுபவம் பெறுவது அவசியம் ஆகிறது. மேலும் மருத்துவர்கள் யோகாசனங்கள், பிராணாயாமம் செய்வதன் மூலம் நோயாளிகளிடம் இருந்து வரும் நோய்த்தொற்றிலிருந்து தன்னை பாதுகாக்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

ஆசிரியர்

மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் அறிவாழமிக்கவர்களாக இருப்பது அவசியமாகிறது. இதற்கு பொதுவான யோகாசனங்கள் செய்வதோடு மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கக்கூடிய ஆசனங்களான சர்வாங்காசனம், சிரசாசனம், சக்கராசனம் செய்வதால் நன்மை பெருகுகிறது. மேலும் விருக்ஷானம், நடராஜாசனம் போன்ற பேலன்ஸிங் ஆசனங்கள் செய்வதன் மூலம் கால்கள் உறுதியாகின்றன. இதன் மூலம் வகுப்பறையில் நீண்டநேரம் நின்றுகொண்டு பாடம் நடத்துவதற்கு உதவுகிறது. அதிக நேரம் நின்றாலும் வெரிகோஸ் வெய்ன் நோய் வருவதில்லை.

பொறியாளர்

கட்டிட பொறியாளர்களாக இருந்தாலும் சரி, கணினி பொறியாளராக இருந்தாலும் சரி, கப்பல் பொறியாளராக இருந்தாலும் சரி, முறையான திட்டமிடலும் எடுத்த காரியத்தை நுட்பமாக செய்வதற்கும் அனைத்து விதமான பிராணாயாமம், பல்வேறு வகையான தியானப்பயிற்சிகள் ஆகியவை உதவுகின்றன.

வழக்கறிஞர்

வழக்கறிஞர்களில் இருவகை: ஒன்று உண்மைக்காகவும் நியாயத்திற்காகவும் மட்டும் வாதாடுபவர்கள். மற்றொன்று பொய்கூறி பணத்திற்காக வாதாடுபவர்கள். இரண்டாவது வகையினரை எப்படியாவது யோகா வலையில் சிக்கவையுங்கள். பின்பு நிச்சயம் அவர்கள் சுயநலம் மறந்து உண்மைக்காக மட்டுமே வேலை செய்வர். பல்வேறு யோகாசன நிலைகளில் செய்யக்கூடிய தியானப்பயிற்சிகள் அனைவரது மனதையும் மாற்றுகிறது.

விளையாட்டு வீரர்கள்

தீவிர உடற்யிற்சியில் ஈடுபடக்கூடிய விளையாட்டு வீரர்களுக்கு யோகாசனங்கள் வெகுவாக பலனளிக்கின்றது என்றால் அது மிகையல்ல. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மற்ற குழு விளைாட்டுகள் எதுவாக இருந்தாலும் உடல் வலிமை பெறவும் முழு ஆரோக்கியமடையவும் அனைத்து வகையான ஆசனங்களும் பயன்படுகின்றன. மேலும் விளையாடும்போது விரைவாக உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க பிராணாயாமம் உதவுகிறது. கபாலபாதி, நாடிசுத்தி போன்ற பிராணாயாமாக்கள் நுரையீரல் கொள்திறனை அதிகரித்து விளையாட்டில் அதிக நேரம் பங்குபெறவும் உதவுகிறது.

பாடகர்கள்

இன்றைய பாடகர் உலகில் பிராணாயாமம் செய்யாத புகழ்பெற்ற பாடகர் இல்லை. அவர்களுடைய குரல் வளத்திற்காகவும் மூச்சு பிடித்து பாடல் வரிகளை பாடவும் தினசரி பிராணாயாமம் செய்யும் பாடகர்கள் ஏராளம். நாடிசுத்தி, பிராமரி, உஜ்ஜயீ போன்ற பிராணாயாமாக்கள் தொண்டை கரகரப்பை நீக்கி குரல் வளத்தை பெருக்குகின்றன. பல புகழ்பெற்ற பாடகர்கள் இளம் பாடகர்களுக்கு வழங்கும் அறிவுரை: பிராணாயாமம் செய் என்பதே.

உழைப்பாளிகள்

இது மட்டுமல்லாது விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சலவைத் தொழிலாளி, கூலித்தொழிலாளி என அனைத்து உழைப்பாளர்களும் கூட பல்வேறு யோகாசனங்களும் செய்ய முடியும். நாள் முழுவதும் கடினமாக உழைத்துவிட்டு, வீடு திரும்பியவுடன் ஒரு 10 நிமிடம் சவாசனம் செய்தால் போதும். உடல் களைப்பும் உடல்வலியும் பறந்துவிடும். மேலும், அனைத்து வகையான ஆசனங்கள், கிரியாக்கள், மூச்சுப்பயிற்சிகள் நாள் முழுக்க உழைப்பதற்குரிய உடல் வலிமையையும் ஆற்றலையும் தருகிறது.

மாணவர்கள்

சமுதாயத்தில் பலதரபட்ட போட்டிகளுக்கு மத்தியில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு யோகா அபரிமிதமான வளர்ச்சியையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது. பல்வேறு வகையான யோகாசனங்கள், தியான முறைகளை செய்யும்போது மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாகவும் புத்திசாலிகளாகவும் ஆகின்றனர். யோகாசனம் உடலின் அனைத்து உள்ளுறுப்புகளையும் இயக்குவதால் மாணவர்கள் தனித்திறமை வாய்ந்தவர்களாக மாறுகின்றனர். மாணவர்கள் அனைத்து யோகாசனங்களையும் செய்யலாம் என்றாலும் சூரிய நமஸ்காரம் வெகுவாக பலனளிக்கிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இன்று அனைத்து பள்ளிகளிலும் யோகாசனத்தை அறிமுகப்படுத்துவது ஒரு மகிழ்ச்சியான விஷயம்.

தொழில்நுட்ப துறைyoga

தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகமாக கணினியில் வேலை செய்யக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சினை மனஅழுத்தம். இது ஸ்பான்டிலைட்டிஸ், கழுத்து வலி, இடுப்பு வலி, சர்க்கரை வியாதி வருவதற்கு காரணமாக அமைகிறது. இத்துறையில் உள்ளவர்கள் மனஅழுத்தத்தை எளிமையாக கையாள்வதற்கான வழிமுறை யோகாவில் உள்ளது. யோகாவில் முதலில் சுவாசத்தை எப்படி கட்டுப்படுத்துவது எப்படி கையாள்வது என்பதை அறிகிறோம்.  மேலும் சுவாசமானது மனக்கொந்தளிப்பையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதற்கு சிறந்த கருவி. எப்போது நாம் மெதுவாக சீராக சுவாசத்தை கையாளுகிறோமோ அப்போது மனஅழுத்தத்திற்கு காரணமான பாரா

சிம்பத்தட்டிக் நரம்புகள் சமநிலையடைகிறது.

நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களுடைய சுவாசமும் மனமும் இணைந்து வேலை செய்யும்போது யோகப்பயிற்சி ஆரம்பித்தது சரிதான் என நீங்களே சந்தோஷமடைவீர்கள்.

கணினியில் அதிக நேரம் அமர்தல், படித்தல், தொலைபேசியில் அதிகநேரம் பேசுபவர்கள் அதனால் வரும் டென்ஷனில் இருந்து விடுபட உட்கார்ந்த இடத்திலேயே கழுத்தை மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்தல், தோள்பட்டைகளை சுழற்றுதல், கைகளை சுற்றுதல், இடுப்பை சுற்றுதல் உள்ளிட்ட எளிமையான பயிற்சிகளை செய்வதன் மூலம் எளிமையாக உடலை தளர்த்த முடியும். மேலும் அவர்கள் செய்ய வேண்டியது: சூர்ய நமஸ்காரம், விருக்ஷாசனம், கோமுகாசனம், உஷ்ட்ராசனம், பஸ்சிமோத்தானாசனம், அர்தமத்ஸ்யேந்த்ராசனம், கபாலபாதி, நாடிசுத்தி பிரணாயாமம்.

இருசக்கர வாகனத்தில் அதிகமாக பயணம் செய்வதால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து விடுபட பவனமுக்தாசனம், சேதுபந்தாசனம், புஜங்காசனம் செய்யலாம்.

வன்முறைக்கு தீர்வு யோகா

இன்று உலகமுழுக்க உள்ள ஒரு முக்கிய பிரச்சினை பயங்கரவாதமும் அதனால் ஏற்படும் வன்முறைகளும் பேரழிவுகளும்தான். இதில் ஈடுபடும் ஒருவன், தன்னையும் நேசிப்பதில்லை இவ்வுலகத்தையும் நேசிப்பதில்லை. காரணம் அவன் மனதில் விதைக்கப்படும் விஷவிதைகள். யோகா உலகத்தை நேசிக்க கற்றுக்கொடுக்கிறது. யோகா பயில்பவர்கள் மனதில் வன்மம் குறைந்து, மென்மையான உள்ளம் உண்டாகி, பிறரை நேசிக்கும் தன்மை உண்டாகிறது. காரணம் இதில் உச்சரிக்கப்படும் ‘ஓம்’ எனும் மந்திரம் மனிதனை இப்பிரபஞ்சத்தோடு தொடர்புபடுத்தி அன்பை உண்டாக்குகிறது. பயங்கரவாதிகள் அனைவரும் யோகா செய்ய வேண்டும்  என்பது எனது கருத்து. மேலும், உலகில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனையும் யோகா சென்றடைந்தால் வன்முறை இருக்காது என்பதும் என் கருத்து.

யோகாசனங்கள் தெரிந்தோ தெரியாமலோ நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகி உள்ளது. நம்முடைய தினசரி நடவடிக்கைகளில்கூட நமக்கே தெரியாமல் நிறைய ஆசனங்களை நாம் செய்துகொண்டிருக்கிறோம்.

உதாரணத்திற்கு,

  • மற்றவரை வணங்குவது பிரணாமாசன்..
  • தரையில் அமர்வது சுகாசன்…
  • நாற்காலியில்  அமர்ந்தால் அது உத்கடாசன்….
  • மண்டியிட்டு அமர்ந்தால் அது வஜ்ராசன்….
  • படுத்தால் சவாசனம்….
  • பலனை எதிர்பாராமல் கடமையை மட்டும் செய்தால் அது கர்ம யோகா….
  • படித்தல் சிந்தித்தல் என்பது ஞான யோகா..
  • பூஜை செய்தால் பக்தி யோகா…
  • மனதை கட்டுப்படுத்தினால் அது ராஜ யோகா…

ஆக, நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் யோகாவில் ஒரு அங்கம். அதே செயல்களை விழிப்புணர்வுடன் செய்தால் வாழ்க்கை மாறும். யோகா என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. உங்களாலும் முடியும் என நம்புகிறேன். பயிற்சியை ஆரம்பித்தால் நீங்களும் ஏதேனும் புதிய அனுபவங்களை நிச்சயம் பெறுவீர்கள், மீண்டும் பழைய வாழ்க்கைக்கு செல்ல பிடிக்காது. இந்த வருடம் சர்வதேச யோகா தினத்தில் சபதமேற்போம் – ‘தினசரி யோகா செய்வோம்’ என்று. நாளும் நலம் பெறுவோம்.

மகளிருக்கு

பெண்கள் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சினை மாதவிடாய்க்கு பிந்தைய காலம். அந்நேரத்தில் உடல் சோர்வு, வயிற்று வலி, கை கால் குடைச்சல், இடுப்புவலி போன்ற பிரச்சினைகள் வருவது சகஜம் அவற்றிலிருந்து விடுபட ஆசனங்கள்: பரிவ்ருத திரிகோணாசனம், சமகோணாசனம், பத்த கோணாசனம், உபவிஷ்ட கோணாசனம்.

குழந்தை பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்தாலோ அல்லது வயிற்றில் அதிக கொழுப்பு வைத்தாலோ செய்யவேண்டிய ஆசனங்கள் நவுகாசனம், பஸ்சிமோத்தானாசனம், தனுராசனம், கபாலபாதி. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்திருந்தால், ஆறு மாதம் இடைவெளி விட்டு யோகாசனம் துவங்கவும்.