“அடல் பூஜல் யோஜனா” திட்டம் நாட்டுக்கு அவசியம் – பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, டெல்லி விஞ்ஞான் பவனில் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

திட்டம் நாட்டுக்கு மிகவும் அவசியம். இந்த திட்டம் வாஜ்பாய்க்கு அர்ப்பணிக்கப்படுகிறது. 7 மாநிலங்களில் 78 மாவட்டங்களில் உள்ள 8 ஆயிரத்து 350 கிராம பஞ்சாயத்துகள், இத்திட்டத்தால் பலன் அடையும்.

நிலத்தடி நீர் குறைவது, குடும்ப பிரச்சினையோ, தனிப்பட்ட பிரச்சினையோ அல்ல. இது, ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும் பிரச்சினை. மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான கருத்து வேறுபாட்டால், தண்ணீர் சேமிப்பு தொடர்பாக ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது. தண்ணீர் பிரச்சினை மிகவும் முக்கியமானது. வாஜ்பாயின் இதயத்துக்கு நெருக்கமானது. நிலத்தடி நீர்வளம் குறைவான பகுதிகளிலும், நிலத்தடி நீர் வேகமாக குறையும் பகுதிகளிலும் இத்திட்டம் சிறப்பு கவனம் செலுத்தும். 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடிநீர் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களுக்கு விவசாயிகள் மாற வேண்டும். விலை மதிக்க முடியாத இயற்கை வளமான தண்ணீரை யாரும் வீணாக்கக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.