அசாமில் தடை செய்யப்பட்ட எட்டு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த, 644 தீவிரவாதிகள் சரண்

அசாமில், தடை செய்யப்பட்ட, எட்டு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த, 644 தீவிரவாதிகள் சரணடைந்தனர்.அசாமில், முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தடை செய்யப்பட்ட, எட்டு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த, 644 தீவிரவாதிகள், சோனோவால் முன்னிலையில், நேற்று சரணடைந்தனர். 177 துப்பாக்கிகள்அதில், அதிகபட்சமாக, என்.எல்.எப்.பி., எனப்படும், வங்கதேச விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்த, 301 தீவிரவாதிகள் சரண்அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து, ஏ.டி.எப்., எனப்படும் ‘ஆதிவாசி டிராகன் பைட்டர்’ என்ற அமைப்பைச் சேர்ந்த, 178 பேர் சரணடைந்தனர். சரணடைந்த தீவிரவாதிகள், தங்களிடம் இருந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் ஒப்படைத்தனர். மொத்தம், 177 துப்பாக்கிகள், 58 தோட்டாக்கள், 1.93 கிலோ வெடிப்பொருட்கள், 52 கையெறி குண்டுகள், 71 வெடி குண்டுகள், மூன்று ராக்கெட் லாஞ்சர்கள், 306 டெட்டனேட்டர்கள், 17 கத்திகள் ஆகியவற்றை ஒப்படைத்தனர்.

நடவடிக்கை

சரணடைந்த தீவிரவாதிகள் மத்தியில் பேசிய, முதல்வர் சர்பானந்த சோனோவால், அசாம் வளர்ச்சிக்காக, நீங்கள் அனைவரும் திரும்பி வந்துள்ளதால், மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தச் செயல் மூலம், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களை, நீங்கள் ஊக்குவித்து இருக்கிறீர்கள். இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற, வெளியே இருக்கும் அனைவரும் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அமைதி இல்லாமல், மாநிலத்தால் வளர்ச்சி அடைய முடியாது. பல நாடுகள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றன. அங்கு, அமைதி நிலவுவதால் தான், அவர்களால் அவற்றை சாதிக்க முடிகிறது. ஆகையால், நாமும் அதை பின்பற்ற வேண்டும். சரணடைந்தவர்கள், மறுவாழ்வு பெற தேவையான நடவடிக்கைகளை, மாநில அரசு மேற்கொள்ளும் என, உறுதி அளிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.