திருவள்ளுவரும் திமுகவும்

இன்று முக்கிய செய்தியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தால் பிரச்சாரம் செய்யும் நிகழ்வு, திருவள்ளுவரைப் பற்றித்தான். காரணம் பி.ஜே.பி திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து விபூதி பூசிவிட்டார்களாம். இது அநியாயமாம், அக்கிரமமாம்,அவர்கள் கூறும் காரணங்கள் பல அவற்றுள் சில.

  1. திருவள்ளுவர் எந்த ஜாதி மதத்தை சேர்ந்தவர் அல்ல. பொதுவானவர்.
  2. விபூதி பூசி, காவி அணிவித்ததது கண்டனத்திற்குரியது.
  3. தமிழர்களுக்கு ஜாதி மதம் என்பது கிடையாது.

நான்காவதாக வரும் உக்கிரப் பெருவழுதியாரின் வெண்பாவில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

”நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்

தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூன்முறையை வந்திக்க சென்னி, வாய் வாழ்த்துக, நன்னெஞ்சம் சிந்திக்க, கேட்க செவி.

அதாவது நான்கு வேதங்களின் மெய்ப்பொருளாய், அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளாய் நான் முகம் தான் மறைந்து நின்று வள்ளுவனாய் தந்துரைத்தான் என்கிறார். இதிலிருந்து வேதத்தின் கருத்துக்களை வள்ளுவர் விளக்கியுள்ளார் என்பது தெளிவாகும்.

இன்னொரு, புலவர், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணார் என்பவர் கூறுகிறார்.

”வேதப் பொருளை விரகால் விரித்து லகோர் ஓதத் தமிழால் உரை செய்தார் – ஆதலால் உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு”

என்கிறார்.

 வேதத்தின் பொருளை விரிவாகத் தமிழில் உரை செய்ததாகக் கூறுகிறார். வேதம் என்பது கால வரையறைக்கு அப்பாற்பட்டது. வள்ளுவர் காலத்திற்கும் முந்தியது. அந்த கால கட்டத்தில் பிற மத வேதங்கள் என்று எதுவும் இல்லை.

காவி உடை

அடுத்துப் பழங்காலத்தில் முனிவர்கள் காவி உடைகளை அணிந்தார்கள். இல்லறத்தை விட்டுத் துறவாரத்தை மேற்கொண்டவர்களும் காவி உடையையே அணிந்தார்கள். துக்கத்தின் அடையாளமான கருப்புத் துணியை வெறுக்காதவர்கள், காவியைக் மட்டும் கண்டு அலறுவதேன்.

காவி உடையில் பெரியதத்துவமே உள்ளது. முற்றும் துறந்த முனிவர்கள் காவி உடையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் உண்டு. செம்பொருளைக் கண்டவர்கள் சந்நியாசிகள். ஆகையால் அவர்கள் செம்மையான காவி உடையை உடுத்துகிறார்கள்.

சந்நியாசிகள் இடிந்த மண்டபங்களில் படுப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். செம்மண்ணில் நனைந்த காவித்துணி இருப்பதால் விஷப் பூச்சிகள் அவர்களை அண்டாது. மேலும் செம்மண் விஷத்தை முறிக்கும் ஆற்றல் உடையது.

அம்மை நோயின் ஒருவகை, அக்கி என்ற நோய், இந்த நோய் வந்தால் காவிக் கல்லை அரைத்துப் பூசுவார்கள். அக்கி குணமாகும். ஆகையால் துறவிகளுக்கும் காவியுடை இயற்கை அரணாக அமைந்துள்ளது.

எனவே காவி நிறத்தைப் பழித்துப் பேசுவதையும், காவிக் கட்சி என்று கூறுவதையும், கருப்புத் திராவிடக் கட்சிகள் நிறுத்த வேண்டும்.

விபூதி அணிவது

விபூதி  நான்கு முறைகளில் தயார் செய்யப்படுகிறது. அவை முறையே கல்பம், அனகல்பம், உபகல்பம், அகல்பம் என்பனவாகும். விபூதி அணிவதால் பல நன்மைகள் உண்டு.

விபூதி செல்வத்தை அளிப்பது, தூய்மையாக்குகிறது. பாவத்தைப் போக்குகிறது. துன்பத்தை நீக்குகிறது. தோஷங்களை நீக்குகிறது. தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறது.

 மந்திரமாவது நீரு, வானவர் மேலதும் நீரு. விபூதி மீது கருப்புச் சட்டைகளுக்கும், காம்ரேடுகளுக்கும் என்ன அவ்வளவு வெறுப்பு?

ஸ்டாலின் கூறுகிறார்.பி.ஜே.பி.காரர்கள் திருக்குறளைப் படித்து அதன்படி நடக்க வேண்டும் என்கிறார். ஸ்டாலின் அவர்களே! திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தை முதலில் பாடுகிறார். நீங்கள் பாடுவீர்களா? மேலும் கள்ளுண்ணாமை, கூடா ஒழுக்கம், புலால மறுத்தல், பிறன்மனை நோக்கா பேராண்மை வாய்மை என்று பலவற்றைக் கூறுகிறார். இவற்றில் திராவிடக் கட்சியினர் எவற்றை எல்லாம் கடைப்பிடிக்கிறீர்கள்?

வள்ளுவரின் தோற்றம்

கலைஞர் ஒரு படத்தை வரையச் சொல்லி இது தான்  வள்ளுவர் என்றார். 2000 வருடங்களுக்கு முன்னர் வள்ளுவர் இப்படித்தான் இருந்தார்? என்று ஒரு உருவத்தைக் காட்ட முடியுமா?

வள்ளுவரின் சிலை இப்படி இருக்க வேண்டும். உடை இப்படி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த யாருக்கும் உரிமை இல்லை. அவரவர் விருப்பம்.

மூதாதையர்

தென்புலத்தார், தெய்வம், விருந்து ஒக்கல் என்று கர்மாக்களைப் பற்றிக் கூறுவதால் வள்ளுவர் இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறார். சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையால் என்பதன் பொருள் என்ன? நான்கு வர்ணங்கள்தானே.

எனவே வள்ளுவர் தி.மு.க.காரரும் அல்ல. பெரியாரும் அல்ல. நாத்திகரும் அல்ல. அவரை அவரவர் விருப்பப்படி வணங்கலாம். அதை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை.

                                                                                                                                                                       – எஸ்.கோவிந்தராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *