மீண்டும் தலைதூக்கும் பிரிவினைவாதம்

அடங்கி கிடந்த தமிழ் பிரிவினைவாதம் மீண்டும் தலைதூக்க துவங்கி விட்டது.  மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ந்தேதி, தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  2019 நவம்பர் மாதம் 1ந்தேதி பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஒரு வால்போஸ்டர் ஒட்டப்பட்டது.    நம் நாடு தமிழ்நாடு என உரக்க முழங்குவோம் என்ற வாசத்தை பெரிய அளவில் அச்சிடப்பட்டு,  தமிழகத்தின் வரைப்படத்தில் பெரியாரின் படம் பொறிக்கப்பட்டுள்ள லோகோவும் பிரசுரித்த போஸ்டர்.   நம் நாடு தமிழ்நாடு என்ற வாசகம் மறைமுகமாக பிரிவினையை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. இந்திய நாடு என்பதை மறுத்து எழுதப்படடதாகவே கருத வேண்டியுள்ளது.  இதன் பின்னணியை சற்றே ஆய்வு செய்தால் பிரிவினைவாதிகளின் தூண்டுதலில் இந்த வால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என்பது புலனாகும்.

          1956 நவம்பர் 1-ந்தேதி மொழிவாரி மாநிலம் உருவான போது, சென்னை மாகாணம்  உருவானது.  தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என 1962-ல் பாராளுமன்றத்தில் தனி நபர் மசோதா கொண்டு வரப்பட்டு,  தள்ளுபடி செய்யப்பட்டது.  1964-ல் தமிழக சட்டபேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானமும் தோல்வியை தழுவியது.  1968- நவம்பர் மாதம் 23ந் தேதி பாராளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  1968-ல் பாராளுமன்றத்தில் இந்திரா காந்தியின் புன்னியத்தால், காங்கிரஸ் பிளவுபட்டது.  இதன் காரணமாக பாராளுமன்றத்தில் தி.மு.க.வின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த காரணத்தால்,  1962-ல் தள்ளுபடி செய்யப்பட்ட மசோதா, நிறைவேற்றப்பட்டது.  எனவே திருமதி இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வின் பிரிவினைக்கு ஆதரவாக தமிழ்நாடு மசோதா நிறைவேற்றப்பட்டது.  அன்று பிரிவினையை விதைத்த விதை இன்று மரமாக வளர்ந்துள்ளது.   மொழிவாரி மாநிலம் பிரிக்க கோரிதான் ஆர்பாட்டம் நடைபெற்றது, தனி நாடு கோரி அப்பொழுது போராட்டம் நடைபெறவில்லை.

          தமிழக சட்ட மன்றத்தில் 1969 ஜனவரி மாதம் 14ந் தேதி சென்னை மாகாணம்,  தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  சுமார் ஐம்பதாண்டுகளுக்கு பின்னால், தனிநாடு கோரிக்கைக்கு ஏற்ப , நம் நாடு தமிழ்நாடு என பிரிவினை வாதத்தை முன் வைத்து, பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு என்ற போர்வையில் ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழகதுக்கென  தனி கொடி ஒன்றை உருவாக்க  வேண்டும் என்கிறார்.   மாட்டிரைச்சி விவகாரம் வெடித்த போது. யாரும் எதிர்பாரத விதமாக தென்னிந்திய மாநிலங்கள் உள்ளடக்கிய தனி திராவிட நாடு கோரும் கோரிக்கை கேரளத்தில் முன் வைக்கப்பட்டது.   இந்த அமைப்பிற்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை நன்கு கவனித்தால், பிரிவினையை எவ்வாறு ஊக்கப்படுத்துகிறார்கள் என்பது நன்கு புரியும்.

          இந்த பிரிவினைவாத அமைப்பிற்கு பின்புலமாக இருப்பவர்கள் மே 17 இயக்கம்,  மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைக் கட்சி, புரட்சிக்கர இளைஞர் முன்னணி போன்றவையும்,  இஸ்லாமிய அமைப்புகளான தமிழ் மக்கள் ஜனநாயக கட்சி, மனித நேய மக்கள் கட்சி, சோசியல் டெமாகிரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா போன்ற பயங்கரவாத அமைப்புகளும் இவர்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள்.   இந்த அமைப்புகளை ஒருங்கினைக்கின்ற பணியினை செய்வது விடுதலைப் தமிழ்ப்புலிகள் கட்சி என்ற ஒரு அமைப்பாகும்.   எவ்வாறு ஹூரியத் கான்பரன்ஸ்  பிரிவினைவாதிகளையும், பயங்கரவாதிகளையும் ஒருங்கிணைத்து காஷ்மீரின் அமைதிக்கு பங்கம் விளைவித்தார்களோ அதே போல், தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதமாக இந்த அமைப்பு செயல்படுகிறது.   இந்த அமைப்புக்கு பலம் சேர்க்கும் விதமாக அண்டை மாநிலத்தின் பங்கும் உண்டு.

          ஆரவாமில்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திர போன்ற மாநிலங்களிலிருந்தும் இவர்களுக்கு உதவி வருவதாக கூறுப்படுகிறது.  ஏதோ மத்தியில் உள்ள மோடி அரசு தென்னகத்தை புறகணிப்பதாக குற்றம் சுமத்தி திராவிட நாடு கோரிக்கையை கையில் எடுத்துள்ளார்கள்.   சந்திரபாபு நாயுடுவின் தொலுங்கு தேச கட்சியின் முன்னாள் அமைச்சர் முரளி மோகன், பாஜக. இப்படியே தென்மாநிலங்களைப் புறக்கணித்துக் கொண்டிருந்தால் தனித் திராவிட நாடு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.  தமிழகம் முதலில் இந்தக் கோரிக்கையை வைத்ததால், அவர்களின் வழிநடத்தல்படி இந்தக் கோரிக்கையை முன்னெடுப்போம் என்று பேசியுள்ளார்.  கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில், பெரியாரைப் பார்த்து பாஜக ஏன் பயப்படுகிறது  என ஒரு கட்டுக் கதையை முன் வைத்து விவரித்துள்ளார்.   கேரளத்தைச் சார்ந்த இருவர் திராவிட நாடு ஹெஸ்டாக் உருவாக்கி, ஒரு வரைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.  எனவே நவம்பர் 1ந்தேதி தமிழகத்தில் நம் நாடு தமிழ்நாடு என்ற போஸ்டரில உள்ள படம் கேரள இளைஞர்கள் உருவாக்கிய படமாகும்.

          பெரியாரிய  உணர்வாளர் கூட்டமைப்பினர் 2018 டிசம்பர் மாதம் 23ந் தேதி திருச்சியில் கூடி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,  பெரியார் தம் இறுதிச் சொற்பொழிவிலே குறிப்பிட்டுக் கேட்டுக் கொண்டுள்ளப்படி, நம் நாடு தமிழ்நாடு, என்கிற கொள்கை முடிவில் நம் மீதான சாதி இழிவுகளையும், அரசியல் அதிகாரத்தையும் செய்துவரும் அனைத்து அந்நிய ஆதிக்கர்களையும், தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றிடும் வகையில் நம் நாடு தமிழ்நாடு என்கிற கொள்கை நோக்கோடு திட்டமிட்ட நீண்டகாலப் பணித் திட்டத்தை இக் கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டுமென   என குறிப்பிட்டுள்ளது அப்பட்டமான பிரிவினைவாதமாகும்.   20.10.2019ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டுப் படத்தைக் கொடியாகவோ அல்லது படமாகவோ முன் வைத்துச் சிறப்பொடும், எழுச்சியோடும் நடத்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள்.  இதுவும் பிரிவினையை ஊக்குவிக்கும் தீர்மானமாகம்.  இந்த உண்மையை வெளிப்படுத்தாமல், பெரியார் கொள்கையின் வழி என மலுப்பலான பதிலை பதிய விடுகிறார்கள்.

          பெரியாரின் கொள்கை வழி என்ன என்பது பற்றி, 14.10.2018 மலேசியா கினி என்ற பத்திரிக்கையில் வந்துள்ள ஒரு செய்தி, 1.7.47-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாகிஸ்தான் கோரிக்கை நாள் என் ஜின்னா கொண்டாடினார்.  அதே தினத்தில் தமிழகத்தில் பெரியார் திராவிடநாடு பிரிவினை நாள் கொண்டாடினார்.   30.3.1942-ல்  இந்தியா வந்த சர் ஸ்டார்ஃபோர்ட் கிரிப்ஸ் தூது குழுவை, பெரியார் தலைமையில் சௌந்திர பாண்டியன், என்.ஆர். சாமியப்பா, எம்.ஏ. முத்தையா ஆகியோர் சந்தித்து, தனி திராவிட நாடு வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக கொடுத்தவர்கள்.  1953 –ல் ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட போதே, தனித் தமிழ்நாடு கோஷம் எழுந்தது.   1956 முதல் அதாவது மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், பெரியார் தனது விடுதலை பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற லோகோவை பிரசுரித்து வந்தார்.

          தி.மு.க.வின் குறிக்கோள் என்பது, தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மொழி வழி மாநிலங்களிலும் இந்திய அரசுரிமை ஓருமைத்தன்மை, அரசியல் அமைச் சட்டம் ஆகியவற்றிக்கு உட்பட்டு நெருங்கிய திராவிட கலாச்சார கூட்டுறவு நிலவப் பாடுபடுவது என்பது தான் குறிக்கோளாகும்.  இவர்களின் குறிக்கோளே கூட, நான்கு மாநில ஒருமைத் தன்மை என்பதே தவறான கருத்தாகும்.   தி.மு.க.வின் தலைவர்கள் கூட அவ்வப்போது, பிரிவினையை ஆதரித்தும், வெளிப்படையாகவே பேசி வருவதும் அதிகரித்துள்ளது.

          இந்த அமைப்புகள் பேசித் தீர்வு காண கூடிய பிரச்னைகளுக்கு கூட, உணர்ச்சி பொங்க பேசி மூளை சலவை செய்து போராட்டங்களை நடத்துவது, அதற்காக மக்களை தூண்டி விட்டு அதை கலவரமாக மாற்றுவது, சட்டம் ஒழுங்கு சீர்குலைய வைப்பது தான் பிரிவினைவாத தலைவர்களின் முக்கியமான பணியாகும்.  தற்போது வள்ளுவருக்கு காவி உடை உடுத்தலாமா என்ற பிரச்சினையில் கூட, பிரிவினைவாதம் தலை தூக்குகிறது.