மகளிர் இட ஒதுக்கீடு மசோதா புதிய பார்லி.,யில் தாக்கல்!

மிக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. வட்ட வடிவிலான பழைய கட்டடத்துக்கு விடைகொடுத்து, அதன் அருகே கட்டப்பட்டுள்ள முக்கோண வடிவிலான கட்டடத்தில், புதிய பார்லிமென்டின் பணிகள் நேற்று துவங்கின. பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. ஐந்து நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தொடர், பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கடந்த, 1948ல் நிறுவப்பட்ட பார்லிமென்ட் அமைந்ததன், 75வது ஆண்டு பயணத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், எம்.பி.,க்கள் பார்லிமென்டின் வரலாறு, அதன் சிறப்புகள் மற்றும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

 

விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று, புதிய பார்லிமென்டில் சிறப்புக் கூட்டத் தொடர் தொடர்ந்து நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள், பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் இருந்து, புதிய பார்லிமென்ட் கட்டடத்துக்கு நேற்று நடந்து சென்றனர். இதைத் தொடர்ந்து, புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் இரண்டு சபைகளிலும் பணிகள் நேற்று துவங்கின. புதிய பார்லிமென்டில் முதல் மசோதாவாக, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தல்களில் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, 1989ல் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்டது.

காங்.,கின் ராஜிவ் பிரதமராக இருந்தபோது, பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் மகளிருக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கலானது. லோக்சபாவில் நிறைவேறிய இந்த மசோதா, ராஜ்யசபாவில் தோல்வியடைந்தது. காங்.,கின் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, 1993ல் இரண்டு சபைகளிலும் நிறைவேறி, சட்டமானது. இதைத் தொடர்ந்து, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, 1996ல் இருந்து பலமுறை முயற்சிக்கப்பட்டது. கடைசியாக, 2010ல், இதற்கான மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது. ஆனால் லோக்சபாவில் நிறைவேறவில்லை.

புள்ளி விபரங்களின்படி, தற்போது லோக்சபாவின் மொத்த உறுப்பினர்களில், 15 சதவீதம் பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர். அதே நேரத்தில் மாநில சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம், 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில், 27 ஆண்டுக்குப் பின், மகளிர் இடஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின், 128வது திருத்தம் என்ற இந்த மசோதாவை, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார்.

இந்த வரைவு மசோதாவுக்கு, பெண்சக்தியை வணங்கும் சட்டம் என்று பொருள்படும், ‘நாரிசக்தி வந்தன் அதீனியம்’ என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன், லோக்சபாவில் பேசிய பிரதமர் மோடி, ”நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். இதற்காகபெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் பல உன்னதமான பணிகளை செய்வதற்காக, கடவுள் என்னை தேர்வு செய்துள்ளார். அந்த வகையில் சிறந்த நோக்கத்துடன் இந்த அரசு மீண்டும் செயல்பட்டுள்ளது,” என, குறிப்பிட்டார்.
ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது, ”இந்த மசோதாவை ஒருமனதுடன் நிறைவேற்ற, அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்,” என, அவர் வலியுறுத்தினார்.