பத்து ரூபாய் பெறும் பிச்சைக்காரன் யார்?

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பாட்டில்களின் அதிகபட்ச விலையுடன் மேற்கொண்டு பத்து ரூபாய் அதிகமாக விற்பனையாளர்கள் வாங்கி வருகின்றனர். இதனை தட்டிக் கேட்கும் குடிமகன்களிடம், இது எங்களுக்கு மட்டுமில்லை, மேலிடம் வரை இதில் பங்கு செல்கிறது, அவர்கள்தான் கூடுதலாக வசூலிக்கச் சொல்கிறார்கள் என்று வெளிப்படையாகவே அவர்கள் சொல்கின்றனர். இதுகுறித்த வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை அருகே சமீபத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. ‘மதுபானக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் பெறும் பிச்சைக்காரன் யார்? என்று எங்களுக்கு தெரிய வேண்டும் அதுவரை மது விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடையை இழுத்து மூடப்படும். அந்த கூடுதல் 10 ரூபாய் பிச்சைக்காரன் யார் என்று எங்களுக்குத் தெரிய வேண்டும்” என்று அந்த பேனரில் வாசகங்கள் இருந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேனர் வைக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது. அதை வைத்தவர்களே எடுத்துச் சென்று விட்டதாக மதுபான கடை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டாலும், அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.