சிறுபான்மையினர் யார்?

உச்ச நீதிமன்றத்தில் நேற்று தேசிய அளவிலான ஒரு முக்கிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய சிறுபான்மை கல்வி ஆணைய சட்டத்தின் பிரிவு 2(எப்) தன்னிச்சையானது என அறிவிக்கக்கோரி தொடுக்கப்பட்ட ஒரு பொதுநல மனு, கடந்த 2020 ஆகஸ்டில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அது தற்போதுதான் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது. தேசிய சிறுபான்மை கல்வி ஆணைய சட்டத்தின் பிரிவு 2(எப்)’ன் கீழ் காங்கிரஸ் அரசு, தனது கட்டுப்பாடற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி 2004ல், தன்னிச்சையாக முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர்கள், பௌத்தர், பார்சி ஆகிய 5 சமூகங்களை தேசிய அளவில் சிறுபான்மையினராக அறிவித்தது. ஆனால், லடாக், மிசோரம், லட்சத்தீவு, காஷ்மீர், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட பாரதத்தின் பல மாநிலங்களில் ஹிந்துக்கள்தான் சிறுபான்மையினராக உள்ளனர். இருப்பினும் இவர்களால் சிறுபான்மையினருக்கான உரிமை, சிறப்பு அந்தஸ்துடன் அங்கு கல்வி நிலையங்களை அமைக்கவோ நிர்வகிக்கவோ முடியாது. இந்திய அரசியலமைப்பின் 30வது பிரிவின் கீழ், மாநிலங்களின் மறுசீரமைப்பு மொழிவாரியாக அமைக்கப்பட்டு இருப்பதால், சிறுபான்மையினரைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்கான அலகு மாநிலம்தான். முழு பாரதம் அல்ல. இதன்படி பார்த்தால், மதம் மற்றும் மொழி சிறுபான்மையினர் மாநில வாரியாகவே கருதப்பட வேண்டும். இந்த பின்னணியில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையச் சட்டம் 2004 இன் பிரிவு 2(எப்) தன்னிச்சையானது, பகுத்தறிவற்றது, அரசியலமைப்பின் 14, 15, 21, 29 மற்றும் 30வது பிரிவுகளுக்கு முரண்படுகிறது. எனவே இதனை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேற்கண்ட மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்து, யூத, பஹாய்சம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கலாம் என்று அறிவிக்க வேண்டும் என கோரிய இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், மாநில வாரியாக சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை நிர்வகிக்க ஆணையிட்டால் பல மதமாற்ற கும்பல்களின் கொட்டம் சற்றே அடங்கும் என எதிர்பார்க்கலாம்.