கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் என்ன சாப்பிடலாம்?

கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்த பின் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகள் தீராத உடல்வலி, உடல்சோர்வு, பசியின்மை, அதிக எடை இழப்பு ஆகியவை தான். இதற்கு ஒரே தீர்வு, நல்ல சத்தான உணவை சாப்பிட்டு நன்றாக ஓய்வெடுப்பது மட்டுமே. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் சுவையையும் வாசனை அறியும் திறனையும் இழப்பதால் அவர்களுக்கு சாப்பிட பிடிப்பதில்லை. அதனால் அவர்கள் உணவை சாப்பிட மிகவும் சிரமப்படுகிறார்கள். மருத்துவமனையில் இருக்கும்போது மருத்துவர்கள், செவிலியர்களின் வற்புறுத்தலால் சத்தான உணவை ஓரளவு சாப்பிட்டு விடுகிறார்கள். ஆனால், வீடு திரும்பியவர்கள் அல்லது வீட்டு தனிமையில் இருக்கும் பலர், தங்கள் உணவில் கவனம் செலுத்துவதில்லை. இது அவர்களின் உடல்நிலையை மேலும் மோசமாக்கும். இதனால், கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்து வீட்டில் இருப்பவர்கள் தங்கள் உணவில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.

கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்ந்து இருப்பார்கள். அவர்களுக்கு வழக்கமான மூன்று வேளை உணவு கொடுப்பது சரியாகாது. அதை அவர்களால் சாப்பிடவும் முடியாது. போதுமான இடைவெளி விட்டு 5 வேளைகளாக உணவை சாப்பிட்டால் அவர்களுக்கு எளிதாக இருக்கும். மேலும் எளிதாக மெல்லக்கூடிய, ஜீரணமாகக்கூடிய உணவுகளை அவர்கள் சாப்பிட வேண்டும். வயிற்றுக்குள் சேராத உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். தேவைக்கு அதிகமாகவும் சாப்பிட கூடாது. குறிப்பாக திசுக்களை வலிமையாக்குவதற்கு தேவையான புரதச்சத்து உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவும் வைட்டமின்கள், தாது உப்புகள் (Minerals) அடங்கிய உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள்
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கஞ்சி, கூழ், பழச்சாறு ஆகியவற்றை தவிர்த்து திடமான உணவை சாப்பிட வேண்டும். குறிப்பாக அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளான முழு தானியங்கள், பயிறுகள், கைக்குத்தல் அரிசி, கம்பு, கேழ்வரகு, திணை போன்ற சிறுதானியங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.அதே சமயம் சர்க்கரை, தேன், வெல்லம், மைதாவால் செய்யப்பட்ட உணவுகள், எண்ணெயில் வறுத்தெடுத்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பழைய நிலைக்குத் திரும்ப சில மாதங்கள் ஆகும். அதற்கு ஆரோக்கியமான உணவுடன் நல்ல ஓய்வும் அவசியம். தியானம், இசை கேட்பது, நல்ல புத்தகங்களை வாசிப்பது, நண்பர்கள், உறவுகளுடன் பேசுவது போன்றவை மன அழுத்தத்தைத் தவிர்க்கும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்
கஞ்சி, கூழ், சூப், இட்லி, தோசை, மென்மையாக செய்யப்பட்ட கோதுமை சப்பாத்தி, கிச்சடி, பொங்கல், பருப்பு சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், நன்கு வேக வைத்த காய்கறிகள், வேகவைத்த முட்டை, பன்னீர், கொண்டை கடலை போன்ற பயிறு வகைகள், சிறுதானியங்கள், பழவகைகள், நீர்மோர் ஆகியவற்றை சாப்பிடலாம்.தினமும் ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. அதுவும் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, பப்பாளி, மாதுளை போன்ற பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயையும் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கேரட், தக்காளி, குடைமிளகாய், பீட்ரூட் உட்பட அனைத்து காய்கறிகள், கீரைகளை தேவையான அளவு சாப்பிட வேண்டும். உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்க சைவ உணவு சாப்பிடுவோர், பருப்பு, பயிறு வகைகள், பன்னீர், சோயா, காளான் ஆகியவற்றை அதிகளவில் சாப்பிட வேண்டும். அசைவ உணவு சாப்பிடுவோர் தினமும் அல்லது வாரம் 5 நாட்களாவது 1 அல்லது 2 வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவது அவசியம். உடலுக்கு அதிக வலிமை சேர்க்க புட்டரிசி, கவுணி அரிசி, மாப்பிளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசி வகைகளை தினசரியோ அல்லது வாரம் 3 முதல் 4 நாட்களோ உணவில் சேர்த்துகொள்வது நல்ல பலனை தரும்.

மாலை நேரத்தில் அல்லது உணவுக்கு இடையே பாதாம், வால்நட், வேகவைத்த வேர்கடலை, பொட்டுக்கடலை, காய்ந்த திராட்சை, உலர்ந்த அத்தி பழம், சர்க்கரை வள்ளி கிழங்கு, பனங்கிழங்கு, வேகவைத்த சோளம், காய்கறி சூப், பால், பாதாம் பால் ஆகியவற்றை சாப்பிடலாம். கோவிட் சிகிச்சையின்போது வழங்கப்படும் ஆன்டிபயாட்டிக்ஸ், ஸ்டீராய்டு மருந்துகளால், நம் குடலில் உணவை ஜீரணமாக்க உதவும் இயற்கையான நுண்ணுயிர்கள் பாதிக்கப்படும். அதை சரி செய்ய தயிர், நீர் மோர் ஆகியவற்றைதினமும் சாப்பிட வேண்டும்.

இந்திய உணவின் மகத்துவம்
நம் இந்திய சமையல் அறைகளில் உள்ள மஞ்சள், மிளகு, இஞ்சி, பூண்டு, சீரகம், கொத்தமல்லி, புதினா, லவங்கம், பட்டை, தேன் ஆகியவை அழற்சி எதிர்ப்புப் வைரஸ் எதிர்ப்புப் கொண்டவை. பல மருத்துவ குணங்கள் நிரம்பிய இந்த பொருட்களை தேவைப்படும் போது உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

-நிரஞ்சனா