வங்கம் தந்த சிங்கம்

சுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அதில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் சியாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் துறை அமைச்சர். அடுத்தவர் பாபா சாஹேப் அம்பேத்கர்.

தேசப் பிரிவினையால் நம் மக்கள் மாபெரும் இன்னல்களைச் சந்தித்து சொந்த நாட்டிலேயே அகதிகளாய் மாறினர். அதன் பின்னரும் “நேரு – லியாகத் அலி ஒப்பந்தம்” என்ற பெயரில், நேரு தொடர்ந்த சிறுபான்மை சமரச நடவடிக்கைகளை எதிர்த்த சியாமா ப்ரஸாத் முகர்ஜி, மந்திரி சபையிலிருந்து விலகினார்.

21/10/1951-ல், காங்கிரசுக்கு கடிவாளமிட “பாரதிய ஜன சங்கம்” என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். சுதந்திர பாரதத்தில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே ஜன சங்கம் மூன்று தொகுதிகளை வென்றது. பாராளுமன்ற ஜனநாயகத்தில் முறைப்படி அடியெடுத்து வைத்தது. டாக்டர் முகர்ஜி தலைமையில் 32 பாராளுமன்ற உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இணைந்து தேசிய ஜனநாயக் கட்சி உருவானது.

தனித்திருந்த சமஸ்தானங்கள் அனைத்தும் விடுதலைக்குப் பின் நம் தேசத்தின் ஓர் அங்கமாகத் இணைந்தன. அனால், ஜம்மு காஷ்மீர் மாகாணத்தில் மட்டும் குழப்பம் தீரவில்லை.

ஜம்மு காஷ்மீருக்கெனத் தனி அரசியல் சாசனம், தனிக் கொடி, தனிப் பிரதமர் என அரசியல் சாசனப் பிரிவு 370-இன் பெயரில் ஏகப்பட்ட அவலங்கள் நேருவால் அரங்கேறின. இதனை ஜனசங்கம் எதிர்த்து போராடியது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தைத் தீர்த்து வைக்கும் நோக்கத்தோடு ஜம்மு நோக்கிப் புறப்பட்டார் முகர்ஜி. அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்தார் எனக் கூறி கைது செய்யப்பட்டார். டாக்டர் சியாமா ப்ரஸாத் முகர்ஜி 1953 ஜூன் 23ல் உடல் நலக் குறைவால் இறந்ததாக அறிவித்தது ஷேக் அப்துல்லா அரசு.

“ஒரே நாடு! ஒரே சட்டம்!” என்ற கொள்கையை வலியுறுத்த உயிர் துறந்தார் டாக்டர் சியாமா ப்ரஸாத் முகர்ஜி.

காஷ்மீர் சட்டப்பரிவு 370 நீக்கப்பட்டு, அவரது கனவு இன்று நிறைவேறியுள்ளது என்பது நமக்கெல்லாம் பெருமை.