மனித வளத்தில் உலகிலேயே முதன்மை பெரும் பாரதம்

ஆண்டுதோறும் ஜூலை 11 ம்தேதி சர்வதேச மக்கள்தொகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வேளையில் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாரதம் மக்கள்தொகையில் முதலிடத்துக்கு வந்து விடும் என ஆய்வியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவுக்கும் பாரதத்துக்கும் இடையே மக்கள் தொகையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க மகத்தான வித்தியாசம் காணப்படுகிறது. பாரத மக்கள்தொகை ஏறத்தாழ சமச்சீராக உள்ளது. ஆனால், சீனாவின் மக்கள்தொகை முதியவர்களின் கூடாரமாக விளங்குகிறது.

சீனாவின் அவலநிலைக்கு வேறு எந்த நாட்டையும் குற்றம்சாட்ட முடியாது. தனது தலையில் சீனாவே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டது. மக்கள்தொகை வெகு வேகமாக அதிகரித்து வந்ததை அடுத்து சீன ஆட்சியாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இதற்கு அவர்கள் ஆற்றிய எதிர்வினைதான், சீனாவின் இன்றைய இக்கட்டான நிலைக்குக் காரணம். ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கட்டுப்பாட்டை சீனா விதித்ததுதான் விபரீத விளைவுக்கான ஆரம்பப்புள்ளியாகும். இது அநாவசியமானது என்பதை உணர்ந்து கொண்ட சீன, 2016ம் ஆண்டு இந்த கட்டுப்பாட்டை தளர்த்தியது. ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்பது வாபஸ் பெறப்படுகிறது. இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்று சீனா திருத்தத்தை மேற்கொண்டது. இருப்பினும், சீனத் தம்பதியர் பலர் ஒரு குழந்தையே போதும் என்ற மனோபாவத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.

இதனால் சீனாவின் கருவுறுதல் விகிதம், உலகிலேயே மிகக்குறைவான கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ள ஜப்பானைக் காட்டிலும் எதிர்காலத்தில் குறைந்துவிடும் வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கைமணி அடிக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில்தான் சீனா முதியோர் களின் தேசமாக உள்ளது. மனித வளம் சீனாவில் தேய்பிறையாகிவிட்டது. சீன மக்கள்தொகை 2027ல் உச்சம் தொடும். அதன்பிறகு சரியத்தொடங்கிவிடும் என்று முன்பு கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 2022ம் ஆண்டிலேயே சீன மக்கள்தொகை உச்சம் தொடும். அதன் பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கிவிடும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் தொழிலாளர் பற்றாக்குறை நுகர்வு அளவு சரிவடைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் எதிர்காலப் பொருளாதாரத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சீன மக்கள்தொகை 144 கோடியை எட்டியுள்ளது. பாரத மக்கள்தொகை இதைவிட ஏறத்தாழ 5 கோடி குறைவாக உள்ளது என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பாரதத்தில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகை இவ்வருடம் எடுக்கப்படவேண்டும். ஆனால், கொரோனா காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்பதை பாரதம் அமலாக்காததால் முதியோர்களின் தேசம் என்ற அக்னி வளையத்துக்குள் சிக்கிக்கொள்ளவில்லை என்பது சிலாகிக்கத் தக்க சிறப்பு அம்சமாகும்.