வீரத்தாய் ராஜமாதா ஜீஜாபாய் (1594 – 1674)

மராட்டிய சாம்ராஜ்யம் என்றதும் நமக்கு சத்ரபதி சிவாஜியின் கதைதான் நினைவுக்கு வரும். சிவாஜிக்கு முதலில் விரலைப் பிடித்து நடக்க கற்றுக் கொடுத்த ஜீஜாபாய்தான் அவனுடைய வீரத்துக்கும் காரணம். ஜீஜாபாய் சிவாஜியின் தாயாகவும் தோழியும் வழிகாட்டியுமாக விளங்கி அவனை ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றிய பெண்ணாகவும் வரலாறு படைத்தாள். அவளது வாழ்க்கை தைரியமும் தியாகமும் நிறைந்ததாக இருந்தது. ஜீஜாபாய் தனது வாழ்நாள் முழுவதும் சிரமங்களையும் துன்பங்களையும் எதிர்கொண்டாலும் பொறுமையை இழக்காமல் தன் வீரப் புதல்வனை தேச நலனுக்காக அர்ப்பணிப்புடன் உருவாக்கினாள்.

புல்தானா மாவட்டம் சிந்த்கேட் என்ற கிராமத்தில் லாகூஜி ஜாதவராவ் மிகவும் செல்வாக்கு பெற்ற சர்தாராக விளங்கினார். அஹமத் நகரில் நிஜாம் ஷாஹியின் சேனையில் உயர் பதவி வகித்தார். அது குறித்து பெருமை கொண்டிருந்தார். அவர் மனைவி கிரிஜாபாய். அந்தத் தம்பதிகளுக்கு மூன்று புதல்வர்கள். அவர்களுக்கு 1598 ஜனவரி 12 அன்று அருமைப் புதல்வியாகப் பிறந்தாள் ஜீஜாபாய். அழகிலும் அறிவிலும் சிறந்த பெண்ணான ஜீஜாவுக்கு மிகச் சிறுவயதிலேயே ஷாஜி போஸ்லேவோடு திருமணம் நடந்தது. அவர் அதில் ஷாஹி சுல்தானுடைய இராணுவத்தில் தளபதியாக இருந்தார். ஜீஜாபாய்க்கு ஆறு மகள்களும் இரண்டு மகன்களும் பிறந்தனர். அவர்களில் கடைக்குட்டி சிவா.

தந்தையும் கணவரும் பிற ஆட்சியாளர்களின் கீழ் பணியாற்றியது ஜீஜாபாய்க்கு ஏமாற்றத்தை அளித்தது.. மராட்டியர்களால் நிறுவப்பட்ட ஸ்வராஜ்யத்தில் சுதந்திரமாக வாழ்வதற்காக அவள் ஏங்கினாள். மராட்டிய குலத்தின் சுய ஆட்சியாளராக மாறும் ஒரு மகனுக்காக கடவுளிடம் மனதார வேண்டிய ஜீஜாபாயின் பிரார்த்தனைக்கு பதில் கிடைத்து சிவாஜி மராட்டிய பேரரசின் ஸ்தாபகராக வளர்ந்தான். ஜீஜாபாயின் கணவர் ஷாஜி போஸ்லே, பிஜாப்பூரின் முகலாய சுல்தான்களின் சேவையில் இருந்தபோது மேலும் இரு பெண்களை மணந்தார். அரண்மனையில் கணவர் கழித்த கேளிக்கையும் ஆடம்பரமுமான வாழ்க்கை பிடிக்காமல் ஜீஜாபாய் சிறுவனான சிவாஜியை அழைத்துக் கொண்டு, பூணேவில் இருந்த ஜாகீருக்குச் சென்று தங்கினாள். அங்குதான் சிவாஜி மராட்டியப் பேரரசை ஸ்தாபிப்பதற்குத் தனியொரு பெண்ணான தாயாரால் பக்தியும் வீரமும் ஊட்டி வளர்க்கப்பட்டான்.

ஜீஜாபாய் செல்வாக்கு மிக்க உறுதியான நிர்வாகியாகவும் போர் முறைகள் அறிந்தவளாகவும் இருந்தாள். சுய மரியாதைக்கும் நல்லொழுக்கத்திற்கும் உருவகமாகத் திகழ்ந்தாள். வளர்ந்து வரும் சிவாஜிக்கும் அப்பண்புகளை ஊட்டினாள். எந்தவொரு கஷ்டத்தையும் சமாளிக்கக் கூடிய கடமை, தைரியம் துணிச்சல் ஆகியவற்றை அவனுக்கு கற்றுத் தந்தாள். மராட்டிய பேரரசின் மிகப் பெரிய ஆட்சியாளர்களில் ஒருவராக தனது மகனை வளர்ப்பதற்காக அந்த வீரத்தாய் குரு சமர்த்த ராமதாசரிடம் சிவாஜியை சீடனாக்கினாள். அவரது வழிகாட்டுதலும் கவனிப்பும் சிவாஜியை எல்லாப் பெண்களிடம் மரியாதை, மத சகிப்புத்தன்மை, நேர்மை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவனாக ஆக்கின.

சிவாஜி ஒரு போர்வீரனாக உருவெடுத்துக் கொண்டிருந்தபோது, ஜீஜாபாய் ஒரு நாள் மகனை அழைத்து, “மகனே! அந்நியக் கொடியை எந்த வகையிலும் சிங்க்காட் கோட்டை மேலிருந்து அவிழ்த்து விட வேண்டும்” என்று கூறினாள். மிகக் கடினமான பணியாக இருந்தாலும் சிவாஜி அன்னையின் உணர்வுகளை மதித்து உடனடியாக நானாஜியை வரவழைத்து தாக்குதலுக்குத் தயாராகும்படி கூறி சிங்க்காடைத் தாக்கி ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்தான். அதன் பிறகு வரிசையாக பல கோட்டைகளை முகலாயர்களிடமிருந்து மீட்டான். வரலாற்றில் எண்ணற்ற நிகழ்வுகள் ஜீஜாபாயின் வாழ்க்கையில் நடந்தன. சில நல்லவை. சில துன்பங்கள் வேதனையுமானவை. ஆனால் அவள் அமைதியாக அவற்றைத் தாங்கினாள். கணவரின் மரணம் அவளுக்கு மிகுந்த துயரத்தைத் தந்தது. தீக்குளிக்கத் துணிந்த தாயைத் தடுத்து சிவாஜி சமாதானப்படுத்தினான். அவளது மூத்த மகன் சம்பாஜி அப்சல்கானால் கொல்லப் பட்டான். சிவாஜி பின்னர் தாயின் ஆசியோடு அதற்குப் பழி வாங்கினான். முகலாயர்களுடனான சிவாஜியின் பல அற்புதமான தப்பிப்புகள், வீரம் நிறைந்த சாகசங்கள் ஆகியவற்றால் பெருமை கொண்டது அந்ததத் தாயின் இதயம்.

சத்ரபதியாக 1674ம் ஆண்டில் தங்க சிம்மாசனத்தில் ஏறிய தனது மகனின் முடிசூட்டு விழாவைக் கண்ட ஜீஜாபாயின் கனவு நிறைவேறியது. சிவாஜியின் முடிசூட்டு விழாவைக் கண்டு களித்த சில நாட்களிலேயே 1674, ஜூன் 17ம் தேதி, ராய்காட் கோட்டையின் அடிவாரத்தில் பச்சாட் கிராமத்தில் ராஜமாதா ஜீஜாபாய் மன நிறைவோடு இறைவனடி சேர்ந்தாள். இன்று ராய்காட் பகுதி புனிதமாகக் கருதப்படுகிறது. சிறுவன் சிவாஜியும் அன்னை ஜீஜாபாயும் இருக்கும் சிலைகள் இந்திய வரலாற்றின் உத்வேகம் தரும் தாய் மகன் பிணைப்பை நினைவூட்டுகின்றன.

– ராஜி ரகுநாதன்