தடுப்பூசி ஏற்றுமதி அவசியமே

பாரதத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்ததால் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு நிறுத்தியது. தற்போது, நாட்டில் தொற்று பரவல் குறைந்துள்ளது, தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனையடுத்து, உபரி தடுப்பூசிகளை தேவை உள்ள பல நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், ‘பாரதம் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ளதை உலக சுகாதார அமைப்பு வரவேற்கிறது. பல வல்லரசுகள், 2 டோஸ் தடுப்பூசிகளை தங்கள் மக்களுக்கு செலுத்துவதுடன் பூஸ்டர் டோஸ்களையும் செலுத்துகின்றன. ஆனால் பல ஏழை நாடுகள் தங்களது மக்களுக்கு ஒரு டோஸ்கூட செலுத்த முடியாமல் தவிக்கின்றன. பாரதத்தின் இந்த முடிவு, உலகளாவிய தடுப்பூசி வழங்குவதில் சமநிலையை அடைய உதவும்’ என்றார்.

தடுப்பூசி ஏற்றுமதி செய்யக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். மாநிலங்களின் தடுப்பூசி தேவைகள் இன்னமும் இருப்பதால் இந்த ஏற்றுமதி கூடாது என சில மாநிலங்களும் கூறுகின்றன. ஆனால், மத்திய அரசு இதனை தொலைநோக்கு பார்வையோடு செயல்படுத்தி வருவதை அவர்கள் சிந்திக்க மறந்துவிட்டனர் அல்லது மறைத்துவிட்டனர் என்பதே உண்மை.

தன்னை சுற்றி உள்ளவர்கள் சந்தோஷமாக இருந்தால்தான் ஒரு தனி மனிதன் சந்தோஷமாக இருக்க முடியும். அதேபோல எந்த ஒரு நாடும் தன்னை சுற்றியுள்ள நாடுகள் சந்தோஷமாக, அமைதியாக இருந்தால்தான் தானும் சந்தோஷமாக அமைதியாக இருக்க முடியும். நமது பாரதம் ‘வசுதைவ குடும்பகம்’ என அனைவரையும் ஒரு குடும்பமாக பார்க்கும் பாரம்பரியம் கொண்ட தேசம்.

இந்த தடுப்பூசி ஏற்றுமதி, நமது நாட்டின் தடுப்பூசிகளுக்கு உலக அளவிலான அங்கீகாரம் பெற்றுத்தர வழி வகுக்கும். பல நாடுகளின் நட்புறவு, ஏற்றுமதி, இறக்குமதி, தொழில் பெருக்கம், அன்னிய முதலீடுகள், புதிய தொழில் வாய்ப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றம், பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி, தேச பாதுகாப்பு, அன்னிய செலவாணி போன்ற பல்வேறு நன்மைகளையும் பெற்றுத்தரும். முன்னதாக முதல் கொரோனா பரவலின்போது நமது மத்திய அரசு அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பல்வேறு மருத்துவ உதவிகளை செய்த காரணத்தினால்தான் நமது நாட்டில் கொரோனா இரண்டாவது பரவலின்போது அந்த நாடுகள் தாமாக முன்வந்து நமக்கு பல உதவிகளை செய்தன என்பது நினைவுகூரத்தக்கது.