தேசிய சுகாதார இயக்கத்திற்கு ஐ.நா விருது

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு மூலம் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான திட்டத்திற்காக பாரதத்திற்கு ஐ.நா விருது கிடைத்துள்ளது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, “அனைவரது உடல் நலத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இயக்கத்திற்கு பாரத உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு வலுவூட்டியுள்ளது. ஆரோக்கியமான மற்றும் உடல் உறுதிமிக்க பாரதத்தை கட்டமைப்பதில் நாம் உறுதி பூண்டுள்ளோம்” என கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் செப்டம்பர் 21, 2022ல் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில், 2022 ஐநா முகமைகளுக்கிடையேயான முனைப்பு குழு மற்றும் உலக சுகாதார அமைப்பின் சிறப்பு திட்டத்தின் ஆரம்ப சுகாதார நலவாழ்வு விருது பாரதத்துக்கு கிடைத்துள்ளது. ஆரம்ப நிலையிலேயே உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் ஏற்படும் இறப்புகள் குறைகின்றன. கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரத உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு படிப்படியாக 23 மாநிலங்களில் 130க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 34 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.