உத்யாமி பாரத்

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற ‘உத்யாமி பாரத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை (எம்.எஸ்.எம்.இ) செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல் எனும் ‘ராம்ப்’ திட்டம், ‘முதல்முறை எம்.எஸ்.எம்.இ ஏற்றுமதியாளர்களின் திறனை மேம்படுத்துதல்’ திட்டம் மற்றும் ‘பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்’ புதிய அம்சங்களை அவர் தொடங்கிவைத்தார். மேலும், பாரதத்தின் எம்.எஸ்.எம்.இ துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக எம்.எஸ்.எம்.இ அமைப்புகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ஆர்வமுள்ள மாவட்டங்கள் மற்றும் வங்கிகளின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக, 2022 தேசிய எம்.எஸ்.எம்.இ விருதுகளை வழங்கினார். அப்போது அவர், ‘நமது நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், பகுதியிலும், நமது தனித்துவமான உலக தரத்திலான உள்ளூர் உற்பத்தியை உருவாக்க  தீர்மானம் எடுத்துள்ளோம். எம்.எஸ்.எம்.இ துறையை மேம்படுத்த கவனம் செலுத்தப்படுகிறது. பாரதம் இன்று ரூ. 100 சம்பாதித்தால், அதில் நமது எம்.எஸ்.எம்.இ துறையால் ரூ. 30 வருகிறது. எங்களைப் பொறுத்தவரை, எம்.எஸ்.எம்.இ என்றால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகபட்ச ஆதரவு என்பதாகும். 200 கோடி ரூபாய் வரையிலான ஆர்டர்களுக்கு, உலகளாவிய டெண்டர்கள் எதுவும் எடுக்கப்படாது என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பதை உறுதிசெய்யும் இந்த முடிவு, ஒருவகையில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கான இடஒதுக்கீடு போன்றது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மூன்று முக்கியத் தூண்களாக வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா ஆகியவை இருக்கின்றன’ என தெரிவித்தார்.