ஒலிம்பிக் ஜோதியில் பிரகாசித்ததா பாரதம்?

எந்தவொரு தேசத்தின் விளையாட்டு வீரர்களாக இருந்தாலும் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே அவர்களின் உச்சபட்ச கனவாக இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக நடத்த முடியாமல் போனது. இந்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் கோலாகலமாக ஜூலை 23ம் தேதி தொடங்கியது.

மொத்தம் 205 நாடுகளிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் வீரர்கள் உள்பட 15,400 வீரர்களும் நாடற்றவர்களுக்கான அணியில் 29 வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர். (உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் பிற நாடுகளில் தஞ்சமடைந்த நாடற்ற வீரர்களும் பங்கேற்க 2016 ரியோ ஒலிம்பிக்கில் அனுமதி அளிக்கப்பட்டது.)

மொத்தம் 33 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்த முறை பாரதத்தின் சார்பில் 127 வீரர்கள் 18 வகை போட்டிகளில் பங்கேற்றனர். இந்த எண்ணிக்கையானது இதற்கு முன்பு பாரதம் காணாத ஒன்று. தமிழகத்திலிருந்து 11 வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு இந்த முறை தேர்வாகினர்.

பாரத அளவில் முதல்முறையாக வாள்வீச்சு போட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவியும், பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்க நேத்ரா குமணனும் தேர்வாகினர். இளவேனில் வாலறிவன் (துப்பாக்கிச் சுடுதல்), சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), சத்யன் குணசேகரன் (டேபிள் டென்னிஸ்), விஷ்ணு சரவணன் (பாய்மரப் படகு), கே.சி.கணபதி-வருண் அசோக் தாக்கர் (பாய்மரப் படகு), ராஜீவ் ஆரோக்கியா (தடகளம்), ரேவதி வீரமணி (தடகளம்), தனலஷ்மி சேகர் (தடகளம்), சுபா வெங்கடேசன் (தடகளம்) ஆகியோரும் தமிழகத்திலிருந்து பங்கேற்றனர்.

முதல் நாளே 49 கிலோ எடைப்பிரிவில் பளூ தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார் பாரத வீராங்கனை மீராபாய் சானு. முதல்நாளே மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தபோதிலும் அடுத்தடுத்து பாரதத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பாரத வீராங்கனை மேரி கோம், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால், அதிர்ச்சி அளிக்கும் வகையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியைத் தழுவி வெளியேறினார். இவர் பங்கேற்ற போட்டியில் மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடி இருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றவரான பாரத வீராங்கனை மானு பேக்கரின் துப்பாக்கியில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கோளாறு ஏற்பட்டது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதன் காரணமாக, 17 நிமிடங்கள் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் கடைசி 3 ரவுண்டுகளில் பங்கேற்க முடியவில்லை. அது நிகழ்ந்திருந்தால் மானு பேக்கர் தகுதி பெற்று தங்கம் வென்றிருப்பார்.

இந்தக் கட்டுரைய எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா உறுதி செய்துள்ளார். பேட்மின்டனில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.
தமிழக வீரமங்கை பவானி தேவி முதல் சுற்றில் வெற்றி பெற்ற போதிலும், அடுத்த சுற்றில் தோல்வி அடைந்தார். “நான் சிறப்பாக செயல்பட்ட போதிலும் என்னால் ஜெயிக்க முடியவில்லை. மன்னித்துவிடுங்கள்” என்று சமூக வலைதளமான டிவிட்டரில் பவானி தேவி குறிப்பிட்டிருந்தார்.

“வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி. உங்களுடைய பங்களிப்புக்காக பாரதம் பெருமை கொள்கிறது. நீங்கள் நமது குடிமகன்களுக்கு முன்னுதாரமாக இருக்கிறீர்கள்” என்று பாரத பிரதமர் பதில் டுவீட் வெளியிட்டது அவர் விளையாட்டு வீரர்கள் மேல் எத்தனை மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.

பாரத அரசின் செயல்பாடுகளைப் பொறுத்தமட்டில், இந்த முறை எந்த குறைபாடுகளும் சுட்டிக்காட்ட முடியாத வகையில் மிகவும் சிறப்பாக இருந்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியது கட்டாயமல்ல என்று ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்திருந்த போதிலும் பாரதத்தின் சார்பில் பங்கேற்ற அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இது வீரர்கள் மீது பாரத அரசுக்கு இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது. வீராங்கனை பவானி தேவியுடன் அவரது தாயாரையும் உடன் அனுப்பி வைக்க அனுமதி அளித்தது. மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்கும், பதக்கம் வென்றவர்களுக்கும் நிதியுதவி, அரசுப் பணி என்று தருவது பாராட்டுக்குரிய விஷயம்தான்.

அதே நேரம், தகுதி படைத்த எத்தனையோ விளையாட்டு வீரர்கள் உரிய வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொண்டு உரிய வசதிகளை அவர்களுக்கும் செய்து தர வேண்டும். தமிழகத்தில் தகுதியுடைய வீரர்களை அடையாளம் கண்டு சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு ஏட்டளவுக்கு நின்று விடாமல் நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும்.

130 கோடி மக்கள்தொகை கொண்டுள்ள நமது பாரதத்தில் ஒரு சிலபதக்கங்களை மட்டுமே பெற முடிவது வருத்தத்துக்குரியது தான். 2020 ஒலிம்பிக்கில் பாரதம் போதிய அளவு பிரகாசிக்கவில்லை என்றாலும், 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்க வேட்டையாட இப்போதே பயிற்சிகளை தொடங்கிட வேண்டும் என்பதே நமது அனைவரின் விருப்பமும்!

-மணிகண்டன் தியாகராஜன்