TNPSC தேர்வு ஊழல் ஊழலுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து

தமிழ்நாடு பணியாளர் தேர்வு மையம் (TNPSC) நடத்திய ‘குரூப் 4’ தேர்வில் நடந்த ஊழல் பற்றி கடந்த ஒரு மாத காலமாக பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் நடைபெற்ற முறைகேடுகள் ஏதோ சினிமாவில் வருவதுபோல் நடைபெற்றுள்ளது. சதிகாரர்கள் ராமநாதபுரம், கீழக்கரை ஊர்களை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது புரியாத புதிர். இந்த முறைகேட்டில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி உண்மையானால் விசாரணை செய்யவேண்டும். அதில் தேசப்பாதுகாப்பு பொதிந்திருக்கிறது.

வழக்கம்போல் திமுக, காங்கிரஸ் கட்சியினர் அண்ணா திமுக ஆட்சியில் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன என்று குற்றம் சுமத்துகிறார்கள். ஊழல் பற்றி பேச திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கொஞ்சம் கூட யோக்கியதை கிடையாது. தமிழகத்தில் ஊழலைத் துவக்கிவைத்ததே திமுகதான். திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.

லஞ்சம் ஏன்? ஊழல் ஏன்? பதுக்கல் ஏன்? கலப்படம் ஏன்? பொய் பித்தலாட்டம் ஏன்? என்று இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு பதில் தேடினால் கிடைக்கும் விடை ஒன்றுதான்.

மக்கள் எப்படியோ அப்படிப்பட்ட அரசுதான் அமையும். ஊழல் மக்கள் இருக்கும்போது ஊழல் ஆட்சியாளர்கள்தானே அமைவார்கள்? (The people get the government they deserve) தேர்தலில் ஓட்டுக்குப் பணம் வாங்கி வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை இத்தகைய ஊழல்கள் தொடரத்தான் செய்யும்.

எளிமை, நேர்மை, தூய்மையான தலைவர்கள் அரிதாகிவிட்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அத்தி பூத்தது போன்று நரேந்திர மோடி போன்ற தலைவர்கள் அமைந்துள்ளார்கள். நல்ல தலைவர்களை அடையாளம் கண்டு அவர்கள் கரங்களைப் பலப்படுத்துவது நாட்டுக்கு நல்லது. நமக்கும் நல்லது.