இதுவும் பக்திதான்

ரசிகமணி டி.கே.சிதம்பரநாதன் ஒரு நாள் தன்  உதவியாளரை அழைத்து, ”உள்ளே ஒரு சந்தனப் பெட்டி இருக்கிறது. எடுத்து வா” என்று சொன்னார்.

உதவியாளர் சந்தனப் பெட்டியைக் கொண்டு வந்து வைத்தார். டி.கே.சி. அந்தப் பெட்டியைத் திறந்தார். அதன் உள்ளே ஒரு பழைய பட்டுப்புடவை இருந்தது. அந்த பழைய புடவையை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். மடியில் வைத்துக்கொண்டார். பிறகு பெட்டியில் வைத்துவிட்டு பெட்டியை வலம் வந்து வணங்கினார். அவரது முகம் ஆனந்தப் பரவசத்தால் மலர்ந்தது. ஆனந்தக் கண்ணீர் வழிந்து ஓடியது.

உதவியாளர், ”ஏன் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்” என டி.கே.சி.யிடம் கேட்டார்.

டி.கே.சி. உடனே சொன்னார். ”எங்கள் குடும்பத்து பெரியவர்கள் இறந்து போனால், அவர்கள் இறந்து போகும்போது அணிந்திருந்த ஆடைகளை வைத்து வழிபடுவோம்.  இந்தப் பழைய புடவை என் பாட்டியின் புடவை. இன்று அவர் மறைந்த நாள். இந்தப் புடவையைப் பார்க்கும் போது என் பாட்டி என் மீது காட்டிய அன்பு என் நினைவுக்கு வருகிறது” என்றார்.

உணர்ச்சிக்கு மதிப்பளிக்கும் இந்த மனோபாவமே ‘பக்தி’.