வசுதைவக் குடும்பகம் சனாதனத்தின் சித்தாந்தம்

உலகிலேயே அதிகமான மொழிகள், வித்தி யாசமான உடைகள், உணவுகள், பழக்க வழக்கங்கள், கடவுள்கள், வணங்கும் முறைகள் என கலாச்சார வேற்றுமைகள் நிறைந்தாலும், அது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கொண்டுள்ளது என உலகோரால் போற்றப்படுகிறது. கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதா ஹிந்து தர்மம்?
இல்லை, வேத இதிகாசக் காலம் முதல், பாரத மக்களிடம் இயற்கையான சில சமூக ஏற்ற இறக்கங்கள் இருந்ததே தவிர, அவர்கள் என்றுமே வேற்றுமை பாராட்டியதில்லை என்பதை வரலாறு தெளிவுபடுத்துகிறது. எனவே, பாரத மக்களைப் பிரித்தாள அண்மைக் காலத்தில் திட்டமிட்டுப் புகுத்தப்பட்ட ஓர் இடைச்சொருகல் வார்த்தையே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது நமக்குப் புலனாகிறது. ஹிந்து தர்மம் யாரிடமும் எக்காலத்திலும் வேற்றுமை பாராட்டியது கிடையாது. அனைத்திலும் ஒற்றுமையே நிலவியது என்பதற்கான பல உதாரணங்கள் வரலாற்றில் கொட்டிக்கிடக்கின்றன. அதில் சில…

தீர்த்த யாத்திரை
தெற்கில் உள்ளவர்கள் காசி, ஹரித்வார் உள்ளிட்ட வடமாநிலங்களுக்குத் தீர்த்தயாத்திரை செல்வது வழக்கம். அதேபோல, வடக்கில் உள்ளவர்கள் ராமேஸ்வரம், கன்யாகுமரிக்கு வருவது என்பது நமது பாரம்பரியத்தில் ஓர் அன்றாட நிகழ்வு. இதில் மொழியோ, உடையோ, உணவோ, பழக்கவழக்கமோ எதுவுமே அவர்களுக்கு ஒரு தடையாக இருந்ததில்லை. அவர்களிடையே வேற்றுமை இருந்ததில்லை. பகைமை பாராட்டியதில்லை, காழ்ப்புணர்வு அறவே இல்லை.

குடும்பம் ஒரு கதம்பம்
ஹிந்துப் பாரம்பரியத்தில் கடவுளை வணங்குவது, வணங்காதது உட்பட அனைத்துக்கும் சுதந்திரம் உள்ளது. இங்கு, ஒரு குடும்பத்தில் வசிக்கும் அனைவருக்கும் குலதெய்வம் ஒன்றாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம் மாறுபடும். ஒருவருக்கு அம்மனைப் பிடிக்கும் எனில் மற்றொருவர் சிவனை வழிபடுபவராக இருக்கலாம். அங்கு கிருஷ்ணனைப் பிடிக்கும் என்பவரும் கண்டிப்பாக இருப்பார். அதேபோல, கடவுள் பற்று எனக்கு அதிகம் கிடையாது என்பவருக்கும் அங்கு இடமுண்டு. இது நம் பாரம்பரியத்தில் சகஜம். ஆனால், இதை நாம் வேற்றுமையாக கருதியதே கிடையாது.

ஆணும் பெண்ணும் சமம்
பாரதத்தில் கார்கி, கோஷா, காக்ஷிவதி, அதிதி, ஷாஷ்வதி, காரைக்கால் அம்மையார் உட்பட பல பெண் ரிஷிகள் ரிக் வேத காலம் தொட்டே இருந்துள்ளனர். புலவர்களுள் பைரவக் கவி, அனன்யா, மீராபாய், ஔவையார் எனப் பல நூறு பெண்புலவர்கள் குறித்த குறிப்பையும் வரலாற்றில் காணமுடியும். தேசத்தை ஆண்டவர்களுள் ராணி சென்னம்மா, லக்ஷ்மிபாய், வேலுநாச்சியார், ருத்ரம்மா தேவி, அப்பக்கா, அஹல்யா பாய் எனப் பல்லாயிரம் அரசிகள் இந்த நாட்டை வெற்றிகரமாக ஆண்டிருக்கிறார்கள். எனவே, ஆண் – பெண் பேதமும் நமது ஹிந்துப் பாரம்பரியத்தில் கிடையாது.

சமுதாய நல்லிணக்கம்
பாரதத்தில் உயர்குலம், தாழ்ந்த குலம் என்பது இருந்ததில்லை. ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் இதிகாசங்களை எழுதிய வியாசரும் வால்மீகியும்கூட பிராமணர்கள் கிடையாது. அவ்வளவு ஏன், ஹிந்துக்கள் வழிபடும் கிருஷ்ணர் ஒரு யாதவர். சுடுகாட்டில் வாழும் சிவன் ஒரு பட்டியலினத்தவர். பார்வதி ஓர் அரசகுலப் பெண். எனவே, இதிலும் உயர்ஜாதி – தாழ்ந்த ஜாதி என்ற வேற்றுமை ஹிந்துப் பாரம்பரியத்தில் கிடையாது. ஜாதி என்னும் சொல்லே இடைச்சொருகல்தான். அக்காலத்தில் செய்யும் தொழிலை வைத்தே வர்ணங்கள் பிரிக்கப்பட்டன. பரம்பரையாக ஒரே தொழிலைச் செய்தால் அதில் புதுமைகள் வெளிப்படும், தொழில் நுணுக்கம் வளரும், நிரந்தரத் தொழில், வருமானம் போன்ற காரணங்களினால் யாரும் வர்ணம் மாறியதில்லை. ஒருவேளை, அந்த வர்ணத்தில் வந்தவர் வேறுதொழில் செய்தால் அவர் வர்ணம் மாறிவிடும் அவ்வளவுதான்.

மொழி
பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் பாரதத்தில் இருந்தாலும் அவை மக்களை ஒன்றிணைத்ததே தவிர, ஒருபோதும் பிரித்ததில்லை. அனைவருக்கும் ஓர் இணைப்பு மொழியாக சமஸ்கிருதமும் தமிழும் இருந்துள்ளன. இந்த இணைப்பால் ஒற்றுமை எளிதில் சாத்தியமானது என்பதை வரலாற்றை சற்றுப் புரட்டிப்பார்த்தால் அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளலாம்.

மதம்
ஹிந்து சமயம் எனப்படும் சனாதன தர்மம் எந்த மதத்தையும் வெறுப்புடனோ காழ்ப்புணர்வுடனோ என்றுமே பார்த்ததில்லை. அனைத்து மதங்களுக்கும் தாய் சமயம் நமது சனாதன தர்மம். தன் குழந்தையை ஒரு தாய் வெறுக்கமுடியுமா? உலக அளவில் பல வருடங்களாக நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி, அனைத்து மதங்களும் ஆசியக் கண்டத்தில் இருந்துதான் தோன்றியுள்ளன என தன் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளது. எனவே, அனைத்து மதங்களுக்கும் நமது சனாதன தர்மம்தான் ஆன்மாவாக, உயிராகத் திகழ்கிறது. ”ஒரு கிறிஸ்தவரிடத்தில் கிறிஸ்தவத்தைக் குறித்துக் கேட்டால் அவர் பைபிளைத் தருவார். ஒரு முஸ்லிமிடத்தில் அதே கேள்வியைக் கேட்டால், அவர் குரானைத் தருவார். ஆனால், என்னிடம் நீங்கள் ஹிந்துமதத்தைக் குறித்துக்கேட்டால்… என் நூலகத்திற்கு உங்களை வரவேற்பேன்” என்றார் சுவாமி சின்மயானந்தர். இதுதான் ஹிந்து தர்மம்.

ஆரியம், திராவிடம்
திராவிடம் எனும் வார்த்தை தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல்வாதிகளால் தங்கள் சுயநலத்திற்காக விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேறு எந்த தென் மாநிலத்திலும் ஆரிய திராவிடப் பேதமில்லை. கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவும் திராவிடக் கட்சிகள் மக்களைப் பிரித்தாளவுமே இது கையாளப்படுகிறது. நமது ஹிந்து தர்மம் ஆரியம் உயர்வு என்றோ, திராவிடம் தாழ்வு என்றோ ஒருபோதும் கூறியதில்லை. திராவிடம் என்னும் வார்த்தை சமஸ்கிருதத்தில் உள்ளது. ஆனால், அது இவர்கள் சொல்லும் அர்த்தத்தில் இல்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நாம் நிலப்பகுதியைப் பிரித்து வகைப்படுத்துவதைப் போன்று வகைப்படுத்த மட்டுமே இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

விழாக்கள்
ஹிந்துப் பாரம்பரியத்தில் நடைபெறும் விழாக்களிலும் ஒற்றுமையைக் காணலாம். தமிழர்கள் கொண்டாடும் பண்டிகையான பொங்கல், மகர சங்கராந்தி, மாகே, பிமலாவ், திங்க்யான், சொங்க்ரான் எனப் பல்வேறு பெயர்களில் பாரதம் உட்பட நேபாளம், தாய்லாந்து, மியான்மர், உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி தேசமெங்கும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. எவ்வித அழைப்பும் இல்லாமல், மிகச்சரியான காலத்தில் உல கெங்கிலும் இருந்து மகா கும்பமேளாவிற்கு வருகை தரும் பக்தர்கள் குறித்து உலகமே வியக்கிறது. இதனைத்தவிர, நவராத்திரி, சிவராத்திரி, ஏகாதசி என ஹிந்துக்களின் விழாக்கள் அனைத்தும் ஒற்றுமையையே பறைசாற்றுகின்றன.

புராணம் முதல் இன்றுவரை
ராமாயணத்தில் அயோத்தியில் பிறந்த ராமன் இலங்கைவரை வந்துசென்றார், அந்த ஸ்ரீராமனுக்கு கர்நாடகாவில் பிறந்த ஹனுமன் நண்பனானது, இலங்கையின் விபீஷணன் சகோதரனானது போன்றவை ஒற்றுமைக்கு கட்டியம் கூறும் நிகழ்வுகள். மகாபாரதத்தில் உத்தரப்பிரதேசத்தில் உள்ளஹஸ்தினாபுரத்தை ஆண்ட திருதராஷ்டிரன், ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை மணம்முடித்தார். தெற்கில் உள்ள ஓர் அரசன் மகாபாரதப் போரின்போது, இருதரப்பினருக்கும் உண வளித்து ‘பெருஞ்சோற்று பெருஞ்சோழன்’ என்று பெயர் பெற்றது, அகண்ட பாரதத்தில் வேற்றுமை இருந்ததில்லை என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். அவ்வளவு ஏன், ஏழாம் நூற்றாண்டில் கேரளாவில் தோன்றிய ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் பயணம் செய்தார். அன்றுமுதல் இன்றுவரை மக்கள் தீர்த்த யாத்திரை செய்கின்றனர் என்பது நமது பாரம்பரியத்தில் மாநில மொழி வேற்றுமை கிடையாது என்பதையே அறுதியிட்டுக் கூறுகின்றன.

யார் காரணம்?
இப்படி, ஹிந்துக் கலாச்சாரத்தில், மக்கள் ஒற்றுமையாக இருந்ததற்கான குறிப்புகளே அதிகமாக இருக்கின்றன. வேற்றுமை என்பது எங்குமே எதிலுமே இருந்தது கிடையாது. ஹிந்துக்களைப் பிரித்தாள வசதியாக, ஆள்பவர்கள் துணையுடன் வேற்று நாடுகளில் இருந்து வந்தவர்களால் ஹிந்துக்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டன. உண்மைகள் திரித்துக் கூறப்பட்டன. பொருள்களின் விளக்கங்கள் மாற்றிக் கூறப்பட்டன. அது இன்றுவரை தொடர்கதையாகிறது.

மதம், இனம், ஜாதி பார்த்து மக்களைப் பிரிப்பது, அவர்களை ஒதுக்கிவைப்பது, மதம் மாற வற்புறுத்துவது, மறுத்தால் கொல்வது போன்ற கொள்கைகள் அனைத்தும் அபிரகாமிய மதங்கள், கம்யூனிச சித்தாந்தத்தின் கோட்பாடுகள்தான். அவர்களின் கோட்பாடுகள் தோன்றியது முதல் இன்றுவரை வேற்றுமை, பிரிவினை மட்டுமே, அவர்கள் மதத்தை வளர்க்க அடிப்படை ஆதாரங்களாக இருந்துள்ளன. செக்யூலரிசம், வேற்றுமையில் ஒற்றுமை, சமாதான உடன்படிக்கை, திராவிடம், போராட்டம், மறுமலர்ச்சி போன்ற வார்த்தைகளும் சோசலிசம், கேப்பிடலிசம், பெமினிசம் என ஆயிரக்கணக்கான இஸங்களும் அவர்கள் மக்களைப் பிரித்தாளப் பயன் படுத்திய வார்த்தைகள்தான் என்பதை வரலாறு தெளிவாகவே நமக்கு உணர்த்துகிறது. இந்தப் பிரிவினை எண்ணங்களைத் தங்களின் சுயலாபத்திற்கு விதைத்தவர்கள் இன்று கலாச்சாரத்திற்கு சவாலாக உள்ளனர் என்பதை வரலாறு உணர்த்துகிறது. உணர்ந்துக்கொள்ள நாம் தயாரா?