எய்ம்ஸ்-க்கு தமிழக அரசுதான் பொறுப்பு

மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர், மதுரையில் தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2018-ல் அறிவித்தது. ஆனால், தற்போது வரை அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. மதுரையுடன் அறிவிக்கப்பட்ட உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்காளம், தெலுங்கான உள்ளிட்ட 16 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெறுவதுடன், வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. அசாம், குஜராத், ஜம்மு காஷ்மீர்,ஜார்கண்ட், இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் நடைபெற்று வரும் நிலையில், எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, மதுரையில் தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க உத்தரவிட வேண்டும்’,என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, ‘தமிழக அரசு தரப்பில் இது தொடர்பாக எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையும் தொடங்கத் தயார்.ஆனால்,அதற்கு சரியான இடத்தை தமிழக அரசு வழங்கினால் உடனே பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.