முடிவுக்கு வந்தது பட்ஜெட் சர்ச்சை

தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் இதுவரை போடப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இதற்கிடையே தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த முரண்பட்ட கருத்துகள், வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் என கூறி பல நாட்கள் ஆகியும் ஒன்றும் செய்யாமல் இருந்தது, தேவையில்லாமல் ஈஷா யோகா நிறுவனர் குரு ஜக்கி வாசுதேவையும், பா.ஜ.க வானதி சீனிவாசன் போன்றோரையும் வம்புக்கு இழுத்தது போன்றவை அவர் மீது சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில், நிதி விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆலோசனைத் தர நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் படித்த, பிரபல லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டு சேவை மேலாளராக வேலை பார்த்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நம்பாமல், ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஷான் த்ரே, அரவிந்த் சுப்பிரமணியன், எஸ். நாராயணன் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். இது தி.மு.கவிலும் மக்கள் மத்தியிலும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

இப்படி பல நிகழ்வுகளுக்கு இடையே பல நாட்களாக தள்ளிப்போடப்பட்டு வந்த பட்ஜெட் தாக்கல் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது. தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பட்ஜெட் தாக்கல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் முடிவில், ஆகஸ்ட்13ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக, வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தி.மு.க அறிவித்தது. அது தற்போது நடைமுறைக்கு வருமா, சொன்னதுபோல வெள்ளை அறிக்கைகள் வெளியாகுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.