டீ செலவு மிச்சம்

‘ஒரே நாடு’ இதழ் சார்பில், ‘மாற்றத்தை விதைத்த மகான் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா’ நுால் வெளியீட்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நுாலை வெளியிட்டார். மத்திய இணையமைச்சர் எல். முருகன் அதனை பெற்றுக் கொண்டார். எல். முருகன் பேசுகையில், ”தீனதயாள் உபாத்யாயாவின் கனவுப்படி பிரதமர் மோடி ஆட்சி புரிகிறார். அனைவருக்கும் வீடு, இலவச குடிநீர் இணைப்பு என பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது” என்றார். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “சில கட்சிகள், அம்பேத்கர் பெயரை வைத்து அரசியல் செய்கின்றன. ஆனால், பா.ஜ.க அம்பேத்கரின் வாழ்க்கையை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்கிறது. பா.ஜ.கவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது, சில தலைவர்களின் தவறான வழிகாட்டுதலால் அக்கட்சித் தொண்டர்கள் பா.ஜ.கவினர் மீது தாக்குதல் நடத்தினர். வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. பா.ஜ.க ஒருபோதும் வன்முறையை கையில் எடுக்காது. ஆளுநர் தேனீர் விருந்துக்கு அழைப்பது மரபு. தி.மு.க விருந்துக்கு செல்லாததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். கவர்னர் அழைப்பிதழ் கொடுத்தபோதே அவர்கள் போக மாட்டோம் என்று ஏன் சொல்லவில்லை? ஸ்டாலின், தான் தமிழக மக்களுக்கான முதல்வர் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார். அவர் தி.மு.கவினருக்கு மட்டும் முதல்வர் இல்லை” என்று கூறினார்.