தமிழகம் எதில் முன்னோடி?

இன்று கொரோனா, உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக, இன்று உலகில் பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அதில் இலங்கையும் ஒன்று. இலங்கையின் வெளிநாட்டு கடன் சுமார் 60 பில்லியன் டாலர். நமது ரூபாய் மதிப்பில் ரூபாய் 4,54,590 கோடி. அவர்களால் அதை சமாளிக்க முடியவில்லை. காரணம் அவர்கள் பெரிதும் நம்பியிருக்கும் சுற்றுலாவும் தேயிலை ஏற்றுமதியும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை.
சரி, தற்போது தமிழகம் பக்கம் வருவோம். ரிசர்வ் வங்கி குறிப்பின்படி, இன்று பாரத நாட்டின் அனைத்து மாநிலங்களும் மொத்தமாக வாங்கி இருக்கும் கடனின் மதிப்பு ரூ. 69,47,045.1 கோடி. இது பாரதத்தில் உள்ள 31 மாநிலங்களின் மொத்தக்கடன். இதில் தமிழகத்தின் கடன் மட்டும் ரூ. 6,59,868.9 கோடி. அதாவது சுமார் பத்தில் ஒரு பங்கு! மேலும், தனது வருட வருமானத்திற்கு மிக அதிகமாக செலவு செய்யும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. அதன் வருட வருமானம் ரூ. 2,02,495.9 கோடி, செலவு ரூ. 3,03,120.3 கோடி. பட்ஜெட்டில் துண்டு 1,00,624.4 கோடி. இது பாரதத்தில் உள்ள மாநிலங்களின் மதிப்பில் மிக மிக அதிகம். சந்தேகம் இருந்தால் ரிசர்வ் வங்கியில் இந்த இணையதளங்களில் இதனை நீங்களே அறியலாம். (https://rbi.org.in/Scripts/PublicationsView.aspx?id=20869), (https://rbi.org.in/Scripts/PublicationsView.aspx?id=20853).
எனினும் இந்த அதிகப்படியான பாரம் தெரியாமல் நாம் சுகமாக வாழ்கிறோம் என்றால், அதற்கு காரணம், பாரதம் போன்ற பல மாநிலங்கள், பல தொழில்கள் கொண்ட ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம். மத்தியில் தேசப்பற்றுக்கொண்ட ஒரு உன்னதத் தலைமையின் கீழ் நடைபெறும் நல்லாட்சி நடைபெறுகிறது. இதனால் நாம் பாரம் தெரியாமல் தமிழகத்தில் இப்போதைக்கு நன்றாக இருக்கிறோம். பிரிவினைவாதிகள் கோருவதை போன்று ஒருவேளை தமிழகம் தனி நாடாக இருந்தால் நமது நிலைமை இலங்கையைவிட மிக மோசமாக இருக்கும் என்பதே நிதர்சனம்.
இதற்கெல்லாம் காரணம் நம்மை மாறி மாறி ஆண்ட திராவிட கட்சிகள்தான். அவர்களின் ஊழல்கள், கொள்ளைகள், ஓட்டுக்காக மக்களுக்கு அளிக்கும் இலவசங்கள், ஊதாரித்தனமான செலவுகள், தன் சொந்த மக்களையே குடிகாரர்களாக ஆக்கி அதில் பிழைப்பு நடத்தும் அரசு, பிரிவினைவாத மூளைச்சலவைகள், வாரிசு அரசியல் என இவர்களின் முறையற்ற ஆட்சியால் பாரதத்தின் வளர்ச்சயில் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டிய தமிழகம் மெதுவாக பின்தங்கி வருகிறது. நிலைமை இப்படியே நீடித்தால் விரைவில் பாரதத்திலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாகிவிடும் தமிழகம். இப்போது புரிந்திருக்கும் தமிழகம் எதில் உண்மையில் முன்னோடியென்று.
(தகவல் உதவி: விஜயராகவன் கிருஷ்ணன்)