சரணடைந்த போராளிகள்

அசாமில் மூர்க்கமாக செயல்பட்டு வந்த தேசிய விடுதலை முன்னணியின் (என்.எல்.எஃப்.பி) என்ற போடோ பயங்கரவாதிகளின் தலைவன் பினோத் முசஹாரி தலைமையில் 22 பயங்கரவாதிகள் அசாமின் உதல்குரி மாவட்டத்தில் தங்களுடைய ஆயுதங்களுடன் அரசிடம் சரணடைந்தனர். முன்னதாக கடந்த 2019ல் அவர்கள் சரணடைவதாக அரசிடம் ஒப்பந்தம் போட்டனர் என்றாலும் அதனை செயல்படுத்தவில்லை.

இதனையடுத்து அரசு மேற்கொண்ட சில அதிரடி நடவடிக்கைகள் காரணமாகவும் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் அழைப்பை ஏற்றும் அவர்கள் தற்போது சரணடைந்து தேசிய நீரோட்டத்தில் இணைந்தனர். இது, அசாமில் நிரந்தர அமைதியை உருவாக்கும் முயற்சியில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, என்.டி.எப்.பி, அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் நான்கு பிரிவுகளுடன் அமைதி ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்ட பின்னர், கடந்த 2020 ஜனவரியில் 1,615 பயங்கரவாதிகள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுக்களை சேர்ந்த சரணடையாத மீதமுள்ள 37 பயங்கரவாதிகளும் விரைவில் சரணடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.