விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவு

ஈஷா யோகா மைய நிறுவனர் சுவாமி ஜக்கி வாசுதேவ் துவங்கியுள்ள ‘கோவில் அடிமை நிறுத்து’ இயக்கத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ‘மனிதனை நல்வழிப்படுத்துவதில் முக்கிய கேந்திரங்களாக கோயில்கள் அமைந்துள்ளன. மனிதனின் வளர்ச்சிக்கான மையங்களாக கோயில்களை அமைந்துள்ளன. கோயில்கள் துணையுடனே 64 கலைகளும் வளர்க்கப்படுகின்றன. தீர்த்தங்கள், தல விருட்சங்கள் என இயற்கையை, பஞ்ச பூதங்களை போற்றுவது நமது ஹிந்து மதம். நம் முன்னோர்களும், அரசர்களும் கோயில்களை கட்டியதோடு நிறுத்தவில்லை. கோயிலில் பூஜைகள் நடைபெற பல தானங்களை தந்துள்ளனர். தீபம் ஏற்றக்கூட தனி தானம் உள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க கோயில்களை நாம் வளர்த்திருக்க வேண்டும். ஆனால் கோயில்களை முழுமையாக பராமரிக்க முடியாத நிலை தற்போது நிலவுகிறது. நம்முடைய பெருமைகளை காப்பதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. காவிரித்தாயை பாதுகாக்கவும், கோயில்களை பராமரிக்கவும் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தற்போது பெரும் முயற்சி எடுத்து வருகிறார். 3 கோடி மக்களை ஒருங்கிணைத்து இந்த ‘கோவில் அடிமை நிறுத்து’ இயக்கம் மூலம் விமோசனம் அளிக்க முயல்கிறார். தர்ம சிந்தனை உள்ள ஆன்மிக பெரியவர்கள், ஆன்மிக அறிஞர்கள், சாஸ்திரம் அறிந்தவர்கள், பக்தர்கள், பொதுமக்கள், ஆன்றோர், சான்றோர் பொறுப்பில் கோயில்கள் வர வேண்டும். எந்த நோக்கத்திற்காக கோயில்கள் உருவாக்கப்பட்டனவோ அவற்றை நவீன அறிவியல் உதவி கொண்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். கலை வளர்க்கும், கல்வி வழங்கும் நிலையங்களாக கோயில்கள் மாற வேண்டும். தற்போது பக்தர்களின் அன்பளிப்பு இருக்கிறது, இனி பங்களிப்பும் இருக்க வேண்டும். கோயில்களை பாதுகாக்க துவங்கப்படும் இந்த முயற்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டர்.