கேரளாவில் மாணவர்கள் வன்முறை

இடுக்கி அரசு பொறியியல் கல்லூரியில் பி.டெக். நான்காம் ஆண்டு படித்து வந்த மாணவர் தீரஜ். கண்ணூரில் வசித்து வந்த இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிச கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தைச் (எஸ்.எப்.ஐ) சேர்ந்தவர். கல்லூரியில் மாணவர் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரசைச் சேர்ந்த கே.எஸ்.யு. மாணவர் அமைப்பினருக்கும் எஸ்.எப்.ஐ மாணவர் அமைப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தீரஜ், அபிஷித், அமல் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் தீரஜ் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற இருவரும் இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் இளைஞரணி பிரமுகரை இடுக்கி போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எஸ்.எப்.ஐ மணவனின் கொலையை அடுத்து, கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள், எஸ்.எப்.ஐ மணவர் அமைப்பினர் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தினர். இதனால் மீண்டும் மோதல் ஏற்பட்டது. மலப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் டி.ஒய்.எப்.ஐ கட்சியினருடன் மோதலில் ஈடுபட்டனர். கண்ணூரில் காங்கிரஸ் அலுவலகம் மீது எஸ்.எப்.ஐ கட்சியினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். திருச்சம்பரம் காங்கிரஸ் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன, கொடிக்கம்பங்கள் உடைக்கப்பட்டன. கோழிக்கோடு பெரம்புராவில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. கொல்லம் நாடாளுமன்ற உறுப்பினரான என்.கே பிரேமச்சந்திரனின் காரை எஸ்.எப்.ஐ, டி.ஒய்.எப்.ஐ அமைப்பினர் சேதப்படுத்தினர்.