குதுப்மினாரின் முன் ஜெய் பகவான் கோயல் எனும் துறவி தலைமையில் கூடிய மஹா கால் மானவ் சேவா எனும் ஹிந்து அமைப்பினர், ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கோஷமிட்டபடி குதுப்மினார் வளாகத்தில் நுழைந்து அதன் வாயிலில் அமர்ந்தனர். பிறகு ஹனுமன் மந்திரம் ஓதத் தொடங்கினர். இது குறித்து பேசிய ஜெய் பகவான் கோயல், ”ஜெயின் மற்றும் ஹிந்து கோயில்களை இடித்து அதன் பகுதிகளைக்கொண்டு சனாதன தர்மத்தினரின் நிலத்தில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனால், குதுப்மினாரின் பெயரை விஷ்ணு மினார் என மாற்ற வேண்டும். டெல்லியில் முஸ்லிம் பெயரை தாங்கியுள்ள பகுதிகளின் பெயர்களையும் ஹிந்துக்களின் பெயர்களால் மாற்ற வேண்டும். அதுவரையும் எங்கள் போராட்டம் அமைதியான முறையில் தொடரும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் ஜெய் பகவான் கோயல் உட்பட சிலரை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது.