ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஜயந்தியும் ஆரோக்கிய பாரதியும்

ஸ்ரீ தன்வந்திரி பகவான், திருமாலின் அவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஆவார். மூன்று உலகங்களையும் காப்பவரான ஸ்ரீ மகாவிஷ்ணு தேவர்களின் நோயைக் குணப்படுத்த ஸ்ரீ தன்வந்திரி பகவானாக அவதரித்தார்.            தேவர்களுக்கும் நோய் வருமோ? வந்தது. அது மரணபயம் என்னும் நோய். தேவர்களின் புண்ணியம் தீரும்போது அவர்களும் மரணம் அடைந்தாக வேண்டும் என்பது விதி. எனவே அவர்கள், தங்கள் நோயைத் தீர்ப்பதற்கு அவர்கள் கண்ட வழி பாற்கடலைக் கடைந்து, அதில் தோன்றும் அமிர்தத்தை அருந்துவது என்பதே  அவ்வாறு அமிர்தத்தை அருந்தினால் மரணம் இல்லாமல் வாழ முடியும் என்று அறிந்தார்கள்.

அதன்படி பண்டையக் காலத்தில் தேவர்களும் அசுரர்களும், மேரு மலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்பினைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள். மலை தாழ்ந்துவிடாமல் இருக்க மகாவிஷ்ணு, ஆமை வடிவெடுத்து மலையின் கீழே சென்று அதனைத் தாங்கினார். பல்லாயிரம் ஆண்டுகள் பாற்கடலைக் கடைந்தபின், முதலில் ஆலகால விஷம் தோன்றியது. அதைக்கண்டு தேவர்களும் அசுரர்களும் அஞ்சி ஓட சிவபெருமான் விஷத்தை எடுத்துத் தானே அருந்தி, அவர்களைக் காத்தார். அதன் பிறகு காமதேனு, ஐராவதம், கற்பக மரம், உச்சைசிரவஸ் போன்றவை பாற்கடலிலிருந்து வெளிப்பட்டன. அதன்பிறகு மகாலட்சுமி தோன்றினாள். இறுதியாக ஸ்ரீ மகாவிஷ்ணு, தானே ஸ்ரீ தன்வந்திரி அவதாரம் எடுத்து, அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியபடி தோன்றினார். அமிர்தம் தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் பட்டது. தேவர்களின் மரண பயம் என்ற நோயும் தீர்ந்தது.ஸ்ரீ தன்வந்திரி பகவான் திருத்தோற்றம்

ஸ்ரீ தன்வந்திரி பகவான் பீதாம்பரம் உடுத்தி, தன் மேல் திருக்கரங்களில் சங்கும் சக்கரத்தையும் தாங்கியிருந்தார். கீழ் இரு கரங்களில் ஒன்றில் அமிர்த கலசமும், மற்றொரு கையில் அட்டைப்புழுவையும் தாங்கியிருந்தார். அட்டைப்புழு வடமொழியில் ‘ஜலூகம்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஜலூகம் என்ற அட்டை, உடலிலுள்ள அசுத்த ரத்தத்தை உறிஞ்சி விடுகிறது. அமிர்தமோ புதிய தாதுக்கள் அடங்கிய ரத்தத்தை உற்பத்தி செய்கிறது. (ஸ்ரீ தன்வந்திரி அட்டைப் புழுவிற்குப் பதிலாக மூலிகைச் செடியைத் தாங்கிய திருவுருவமும் காணப்படுவதுண்டு

ஸ்ரீ தன்வந்திரி பகவானின் பூலோக அவதாரம்

தேவர்களுக்கு மட்டும் நோயில்லாத வாழ்வு கிடைத்தால் போதுமா? பூலோக மக்களைக் காக்க வேண்டாமோ? காசியை ஆண்ட மன்னனுக்கு நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவர் மகாவிஷ்ணுவை வேண்டினார். மகாவிஷ்ணு காசி மன்னனின் மகனாக – தன்வந்திரியாக அவதரித்தார். இவரே பூலோக தன்வந்திரி ஆவார். இவர் பெயர் திவோதாஸர். இவர் ஐப்பசித் திங்கள், கிருஷ்ண பக்ஷம், திரயோதசி நாளில் அஸ்த நட்சத்திரத்தில் அவதாரம் செய்தார். இந்த நாளே தன்வந்திரி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

புராண – இலக்கியங்களில் தன்வந்தரி

கலாவ முனிவருக்கும் அவரது மனைவி வீரபத்ராவுக்கும் பிறந்தவரது பெயரும் தன்வந்திரி என்றும் சில நூற்கள் குறிப்பிடுகின்றன. அவர் தேவ வைத்தியர்களான அசுவினி தேவர்களிடமிருந்து மருத்துவம் படித்தார் என்றும், அவர் ஒரு வைத்திய பரம்பரையை உருவாக்கினார் என்றும் குறிப்புகள் உள்ளன,

வைத்தியத் துறையில் நிபுணராக விளங்கிய ஒவ்வொருவருக்கும் ‘தன்வந்திரி’ என்ற சிறப்புப் பெயர் வழங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. விக்கிரமாதித்ய மன்னனின் ஆஸ்தான மருத்துவர் பெயர் தன்வந்திரி என்பதும், அவர் ‘தன்வந்திரி நிகண்டு’ என்ற மருத்துவ நூலை எழுதியதாகவும் வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. இது தவிர மத்ஸ்ய புராணம், மார்க்கண்டேய புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம், பத்ம புராணம் போன்ற புராணங்களிலும் ஸ்ரீ தன்வந்திரி பகவானைப் பற்றியச் செய்திகள் காணப்படுகின்றன. பிற மொழி இலக்கியங்களிலும் மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த செய்தி குறிப்பிடப்படுகிறது.

“எருத்துக் கொடியுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்

ஒருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை

மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா! மறுபிறவி தவிரத்

திருத்தி உண்கோயிற் கடைப்புகப் பெய்திருமாலிருஞ் சோலையெந்தாய்!”          

                                                                   என்ற பெரியாழ்வார் திருமொழியும் இச்செய்தியைக் குறிப்பிடுகிறது.

ஆரோக்கியபாரதி தமிழ்நாடு  பற்றிய அறிமுகம்

 ஒரு மனிதன் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை பெறவும் தன் வாழ்க்கையில் பெற்ற செல்வங்களை அனுபவிக்கவும், மகிழ்ச்சி, செழிப்பு. முன்னேற்றம் போன்றவற்றை பெற்றிடவும் ஆரோக்கியம் மிக மிக அவசியம் மேலும் ஒரு நாடு செழிப்பும் வளர்ச்சியும் பெற்று முன்னேற்றம் பெற அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி மனிதரின் ஆரோக்கியமும் அத்தியாவசியமாகின்றது.

இதனை கருத்தில் கொண்டு இதற்கு செயல் வடிவம் கொடுத்து,  நம் நாடும் அதன் மக்களும் ஆரோக்கியத்துடன் அனைத்து துறைகளிலும் முன்னேறிட 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி அன்று தன்வந்திரி ஜெயந்தி திருநாளில் ஆரோக்கியபாரதி அமைப்பு கேரள மாநிலம் கொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது.

 மத்தியபிரதேச மாநிலம் போபாலை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆரோக்கியபாரதி எனும் நம்முடைய இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தேச மக்களின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றத்திற்காக பாரம்பரியம் மிக்க நம் தேசியத்தின் பண்டைய ஆரோக்கிய வாழ்ககை முறையை மக்களுக்கு கற்பித்தல், பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவ அணுகுமுறையில் மக்களின் நோய் தீர்த்தல், பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ மாணவியருக்கும் சில எளிய பக்கவிளைவுகள் இல்லாத நம் பாரம்பரிய வீட்டு மருத்துவம், யோகா, அவசரகால முதலுதவி சிகிச்சை, சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகளை தகுந்த ஆசிரியர்கள் மூலம் போதித்து ஆரோக்கிய விழிப்புணர்வு பெற வைத்து அவர்களை ஆரோக்கிய மித்திரர்களாக உருவாக்குதல் மற்றும் அவர்கள் மூலமாக அவர்கள் குடும்பத்தினர், அவர்கள் வாழும் இடத்தில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோரையும் ஆரோக்கிய விழிப்புனார்வு பெற வைத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்தல் போன்ற பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது.

ஆரோக்கிய பாரதியின் இந்த சிரிய முயற்சிக்கு வலு சேர்க்க சமுதாயத்தின் ஆரோக்கியத்தில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட சமுதாய சமர்ப்பண குணத்துடன் உள்ள நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் (ஆரோக்கிய மித்திரர்கள்) காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில், பல்வேறுவித பணிகளை செய்து வருகின்றனர். இவர்கள் மக்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த தினசரி, வார மற்றும் மாத நிகழ்ச்சிகள் நடத்துதல், விஷேஷ நிகழ்ச்சிகள், வகுப்புகள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை அப்பகுதி மக்களுடன் இணைந்து நடத்தி ஆரோக்கிய விழிப்புணர்வை உண்டாக்குகின்றனர், நம் தேசம், முழுவதும் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உண்மையான பாரதம் கிராமங்களில்தான் வாழ்கிறது, நம் தேசத்தின் 80% மக்கள் இன்று கிராமங்களில்தான் வாழ்கின்றனர்.

 ஆனால் இந்த 21ம் நூற்றாண்டில் கூட கிராமங்களில் வாழ்பவர்களின் ஆரோக்கியம் இன்றும்கூட கேள்விகுறியாகதான் உள்ளது. சரியான மருத்துவ விழிப்புணர்வு, கண்காணிப்பு போன்றவை இல்லாததால் இன்றும் நம் கிராமங்களில் உள்ள மக்கள் அவதியுறுகின்றனர். முறையான சிகிச்சை இல்லாமல் சிறு சிறு நோய்களும்கூட பெரியதாக வளர்ந்து அவர்களின் உயிரை குடிக்கின்றது. நகரங்களிலோ மேற்கத்திய கலாசார மோகம் மனிதர்களின் வாழ்க்கைமுறையை சார்ந்த புதியவகை வியாதிகளுக்கு வித்திடுகிறது. இவைகள் மட்டுமின்றி மக்களிடம் உள்ள சுகாதார விழிப்புணர்வு குறைவு. ஆரோக்கியத்தில் அலட்சியம், போதிய கல்வியறிவு இல்லாமை, சத்துணவு குறைபாடு, பல்வேறு தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாதல், மனம் தீய வழிகளில் அலைபாய்தல் போன்ற பல்வேறு காரணிகளும் மனிதனை நோயுற செய்கின்றன.

இவை அனைத்திற்கும் நாம் நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய பாரத கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நம் உன்னதமான தெய்வீகம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த அமைதியான வாழ்க்கை முறையை விடுத்து மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றுவதும்கூட ஒரு முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது என்றால் அது மிகை அல்ல. எனவே நாம் ஆரோக்கியமாக வாழ, தேசத்தை முன்னேற்ற தம் பாரம்பரிய வாழ்க்கை முறையை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் ஆரோக்கிய பாரதி உறுதி கொண்டுள்ளது.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”

   எனும் திருவள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப நோய் வந்த பிறகு அதற்கு உரிய மருத்துவம் செய்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம்தான் என்றாலும் அந்த நோய்கள் வரும்முன் தடுப்பது, அது வராமல் காப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல் அதைவிட மிக அவசியம் என்பதை குறிக்கோளாகக்கொண்டு அதை நோக்கியே நம் ஆரோக்கிய பாரதி அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஆரோக்கியம் என்பது நம் உடல் ஆரோக்கியம் மட்டும் அல்ல. அது நம் மன ஆரோக்கியத்தையும் சார்ந்தது. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வித்தியாசப்படும் அது அவர்களின் வாழ்க்கை முறை, வசிக்கும் பகுதி, செய்யும் தொழில், வயது, மன நலம், உடல் நலம், ஆன்மிகம், சுற்றுப்புற சூழ்நிலை போன்ற பல்வேறு காரணிகளுக்கு ஏற்ப மாறுபடும் ஆயினும் ஆரோக்கிய விழிப்புணர்வும் அதை ஒட்டிய சேவைகளும் நம் தேசத்தில் உள்ள ஒவ்வொரு கடைசி குடிமகனுக்கும் சென்று சேர்வதை நாம் உறுதி செய்யவேண்டும் எனும் உயர்ந்த இலக்கோடு நம் ஆரோக்கியபாரதி ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நம் தேசம் முழுவது நடத்திவருகிறது.

உதாரணமாக

ஆரோக்கியமித்ரா பயிற்சி வகுப்புகள், பள்ளிகள் சார்ந்த பல்வேறு ஆரோக்கிய நிகழ்ச்சிகள், நம் கிராமம் – ஆரோக்கிய கிராமம், ஆரோக்கிய விழிப்புணர்வு பேரணி. யோகா, சூரிய நமஸ்காரம், மூலிகை செடிகளையும் அதன் பலன்களையும் மக்களுக்கு அறிமுகம் செய்தல், வீட்டு மருத்துவம், முதலுதவி சிகிச்சைகள், ஆபத்து காலத்தில் மக்களுக்கு மருத்துவம் மற்றும் அனைத்து உதவிகளையும் செய்தல், ஆரோக்கியம் சார்ந்த புத்தக வெளியீடுகள், மருத்துவ மாணவர்களை ஆரோக்கிய சேவையில் ஒருங்கிணைத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விஷேஷ ஆரோக்கிய நிகழ்சிகள், கர்ப சம்ஸ்கார், தன்வந்திரி ஜெயந்தி, சர்க்கரை நோயில்லா பாரதம், உலக யோகா தினம், ஆரோக்கிய சம்பதா, பாரதீய ஸ்வச் சிந்தனா, கண்தானம் மற்றும் ரத்த தான விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்துதல், மருத்துவ முகாம்கள், ஆரோக்கிய பயிலரங்கங்கள் நடத்துதல் போன்றவைகள் அவற்றில் சில…..

ஆரோக்கிய பாரதி உங்களை அன்புடன் வரவேற்கிறது

எங்களுடன் ஆரோக்கிய மித்திரர்களாக இணைந்து நம் தேசத்திற்கான ஆரோக்கிய தொண்டாற்றுதல், மருத்துவர்கள் எங்கள் ஆரோக்கிய மித்திரர்களுக்கும், மக்களுக்கும் ஆரோக்கிய வாழ்வு வாழவும் வழி காட்டுதல், தங்கள் கிராமம் வாழும் பகுதி / அருகில் உள்ள பள்ளிகளுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு ஏற்படுத்திடுதல், ஆரோக்கிய பாரதியின் பல்வேறு நிகழ்சிகளில் பங்கு பெற்றிடுதல், ஆரோக்கிய பாரதியின் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்கு நிதியுதவி செய்திடல் போன்ற தேசத்தை வலிமையாக்கும் நம் ஆரோக்கிய பாரதியின் சீரிய செயல்களில் பங்கு பெற்றிட ஆரோக்கியபாரதி உங்களை அன்புடன் அழைக்கிறது.

              (ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஜயந்தி – அக்டோபர் 23ம் தேதி)

                          –கார்த்திக்