மாநகராட்சியை கண்டித்து கடையடைப்பு

பெங்களூரு சாமராஜப்பேட்டையில் உள்ள இத்கா மைதானத்தை வக்பு வாரியத்துக்குக் கொடுக்கும் பெங்களூரு மாநகராட்சியின் முடிவை கண்டித்து சாமராஜ்பேட்டை குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று கடையடைப்பு நடத்தப்பட்டது. இத்கா மைதானத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியதால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன் காவலும் பலப்படுத்தப்பட்டது. ஹிந்து ஜன ஜாக்ரிதி சமிதி, விஷ்வ சனாதன பரிஷத், ஸ்ரீராம சேனா, பஜ்ரங் தளம், ஹிந்து ஜாகரன் சமிதி உள்ளிட்ட 50 அமைப்புகள் பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இத்கா மைதானத்தை  விளையாட்டு மைதானமாகவே பராமரிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் வீடு வீடாக பிரச்சாரம் செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, முஸ்லிம்கள் அங்கு ஒரு வருடத்தில் இரண்டு முறை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்.  மீதமுள்ள நாட்களில் அதனை விளையாட்டு மைதானமாக பயன்படுத்த வேண்டும். ஆனால், மாநகராட்சி (பி.பி.எம்.பி) இதில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது, இந்த விவகாரத்தில் பா.ஜ.க அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும், இங்கு விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தற்காலிக கடைகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் கோரியுள்ளன. சாமராஜ்பேட்டை கணிசமான எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி. இத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜமீர் அகமது கான் ஒரு மதத்தின் எம்.எல்.ஏ போல செயல்படுகிறார். அவரது இந்த அரசியல் விளையாட்டுகள் தொடர்ந்தால் பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். சர்ச்சைக்குரிய இத்கா மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை மைதானத்தில் நடத்துவதற்கு பி.பி.எம்.பி  அனுமதி மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.