சிஷக் பர்வ் கல்வி முயற்சி

ஒரு தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வகையில் நமது பாரதத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்காக மத்திய கல்வித் துறையின் புதிய முயற்சியான ‘சிஷக் பர்வ்’ திட்டத்தின் கீழ், பல புதிய முன்முயற்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். சிஷக் பர்வ் கொண்டாட்டம் செப்டம்பர் 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. ‘தரமான மற்றும் நிலையான பள்ளிகள்: இந்திய பள்ளிகளிலிருந்து கற்றல்’ என்பது சிஷக் பர்வின் 2021 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்.

இந்நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் நமது கல்வி முறையை உலகளாவிய போட்டிகளுக்கு ஏற்ப நமது இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் என்று கூறினார். மேலும், பாரத சைகை மொழி அகராதி, பேசும் புத்தகங்கள் (பார்வையற்றோருக்கான ஆடியோ புத்தகங்கள்), சி.பி.எஸ்.சி’க்கான பள்ளி தர உத்தரவாதம் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு, ‘நிபான் பாரத்’திற்கான நிஷ்தா ஆசிரியர் பயிற்சித் திட்டம், கல்வித் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், சி.எஸ்.ஆர் பங்களிப்பாளர்கள் பள்ளி மேம்பாட்டிற்கு உதவுவதற்கான வித்யாஞ்சலி இணையதளம் உள்ளிட்டவற்றை துவங்கிவைத்தார்.