மதவெறி பேச்சு உரைக்கும் உண்மைகள்

அண்மையில் கன்யாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் தலைமறைவாகி, விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? கன்யாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில், ஜார்ஜ் பொன்னையா என்ற அந்தப் பாதிரியார் பேசியதன் காணொலி, சமூக வலைதளங்களில் பரவியது. அதில் “திமுக ஆட்சிக்கு வந்தது கிறிஸ்தவர்கள் போட்ட பிச்சை” என்று கூறியதோடு, பிரதமர் மோடி, அமித்ஷா பாரதத்தாய், ஹிந்துக்கள் ஆகியோர் குறித்தும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

அந்தப் பாதிரியார் மீது கண்டனங்கள் குவிந்ததையடுத்து, ஹிந்து முன்னணி அளித்த புகாரின் பேரில் ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, “மத நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதிக்கு ஊறு விளைவிப்பவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஓரிடத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை சமூகஅமைதியும் மத நல்லிணக்கமும் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் அதே இடத்தில் கிறிஸ்தவர்களோ அல்லது இஸ்லாமியர்களோ பெரும்பான்மையாகி விட்டால் நல்லிணக்கத்தின் நிலை அதோகதிதான் என்பதும் மீண்டும் ஒருமுறை தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

அதுவும் “எங்களின் சதவீதம் மேலும் அதிகரித்தால்…” என்று ஹிந்துக்களுக்கு பகிரங்கமாகவே மிரட்டல் விடுக்கிறார் பாதிரியார். இதன் மூலம், கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் என்ற ஹிந்துக்களின் கோரிக்கைக்கு மீண்டும் வலு சேர்க்கிறார். அதே போல, நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தியைக் குறிப்பிட்டு,மண்டைக்காடு கலவரத்தோடு சம்பந்தப் படுத்துகிறார். மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு வந்த ஹிந்து பெண்களை மானபங்கப்படுத்த கிறிஸ்தவ மீனவர்கள் முயன்றதும் அதைத் தடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 மீனவர்கள் பலியானதும் வரலாறு. இதைத் தவிர ஹிந்துக்களுக்கும் மண்டைக்காடு கலவரத்துக்கும் சம்பந்தமே இல்லை.

ஆனால், இதைத் திரித்து மீண்டும் மத கலவரத்தைத் தூண்ட முயலுகிறார் பாதிரியார்.இந்தப் பேச்சில் பூமித்தாய், பாரதத்தாய் இருவரையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார் பாதிரியார். மதமாற்றம் ஒருவரின் தேசியத்தன்மையை இழக்க வைக்கும் என்பதற்கு இவரின் பேச்சு ஓர் உதாரணம். அதே போல, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் திமுக எம்.எல்.ஏ சுரேஷ்ராஜனுக்கு தான் ஆலோசனை வழங்கியதை பாதிரியார் வெளிப்படுத்துகிறார். தேர்தல் அரசியலுக்குள் மதத்தைக் கலக்கக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.

ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ சர்ச்சுகளின் பிடியில்தான் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன என்பது புரிகிறது. பால் தாக்கரே மத அரசியலைக் கையிலெடுத்தார் என அவருக்கு ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்த தேர்தல் ஆணையம், கிறிஸ்தவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் திமுக-வை என்ன செய்யப் போகிறது?

சிறுபான்மை ஆணையத் தின் பீட்டர் அல்போன்ஸுக்கு ஒரு கேள்வி: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ சபைக்கு பரிந்துரைத்து, அவரை பதவி நீக்கம் செய்வீர்களா? அல்லது வெறும் கண்துடைப்பு வசனத்துடன் கடந்துபோய் விடுவீர்களா? அதே ஆர்ப்பாட்டத்தில், ஸ்டீபன் என்ற பாதிரியாரும் வேறு சிலரும் மதவெறியைத் தூண்டும் விதத்தில் பேசினார்கள். அவர்களின் மீது நடவடிக்கை எப்போது என்பதே ஹிந்துக்களின் கேள்வி.
-அருணகிரியான்